Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 30/09/2011

காசோலைக்கான துரித தீர்வு

காசோலைக்கான துரித தீர்வு

SPEED CLEARING

வங்கிகள் தமது வழக்கமான செயல்பாட்டின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் ஒப்படைக்கும் காசோலைகளை சேகரிக்கும் பணியை மேற்கொள்கின்றன. அவ்வாறு சேகரத்திற்காக அளிக்கப்படும் காசோலைகள் உள்ளூர் வங்கிக்கிளைகளை சேர்ந்தவையாக இல்லாமல் போகலாம்.  அத்தகு காசோலைகள் வெளியூர் காசோலைகள் என்று அழைக்கப்படுகின்றன.   வங்கிகள் அமலாக்கம் செய்துள்ள “மொத்த வங்கிச் சேவை” (Core banking solution) வழிமுறையைப் பயன்படுத்தி, சிறப்பானதொரு தீர்வுமுறையை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.  இது துரிதத் தீர்வுமுறை என்று அழைக்கப்படுகிறது.  இது குறித்து, பொதுமக்களின் நலன் கருதி மேலும் விழிப்புணர்வை ஊட்டிட பின்வரும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விபதில் பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது.

1. காசோலைக்கான துரித தீர்வு என்றால் என்ன ?

வெளியூர் காசோலைகளை உள்ளூர் தீர்வு மையத்தில் தீர்வுக்காக ஏற்றுக்கொள்ளுதல் காசோலைக்கான துரித தீர்வு ஆகும். ஆனால் வெளியூர் காசோலைகளைத் தீர்வுக்காக உள்ளூரில் ஏற்கும்போது, அந்த வெளியூர் கிளை “கோர்-பாங்கிங்” என்னும் கணினியால் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிக்கிளைகளுள் ஒன்றாக இருக்க வேண்டும்.  உள்ளூர் வங்கிக்கிளைகளும் வலைத்தளத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. காசோலைக்கான துரித தீர்வு ஏன் வேண்டும் ?

இதுவரை இருந்த தீர்வு முறைகளில் காசோலைகள் சமர்ப்பிக்கப்படும் இடங்களிலிருந்து பண பட்டுவாடா செய்யப்படும் இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டி உள்ளதால் கூடுதலான கால அவகாசம் தேவைப்படுகிறது. காசோலைக்கான துரித தீர்வு வெளியூர் காசோலைகளை பணமாக்குவதற்கு உண்டான கால அவகாசத்தை குறைக்க முற்படுகிறது.

3. துரித தீர்வு முறை தொடங்கப்படுமுன் வெளியூர் காசோலைகள் தீர்வுக்கு பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன ?

வெளியூர் காசோலை வைத்திருக்கும் ஒரு நபர் தனது வங்கிக்கிளையில் அதை சமர்ப்பிக்கிறார். காசோலையை ஏற்கும் இந்த கிளை சமர்ப்பிக்கும் வங்கிக்கிளை (Presenting branch) என்று அழைக்கப்படுகிறது. இந்த காசோலை தீர்வுக்காக எந்த நகரத்திற்கு அனுப்பப்படுகிறதோ அந்த நகரத்திலுள்ள அந்த வங்கிக்கிளை ஏற்பு வங்கிக்கிளை (Collecting branch) எனப்படும். ஏற்பு வங்கிக்கிளை காசோலையை உள்ளூர் தீர்வகத்தில் தீர்வுக்காக சமர்ப்பிக்கும். காசோலை எந்த வங்கியின் மேல் வரையப்பட்டுள்ளதோ அல்லது பணமாக்குவதற்காக எந்த வங்கிக்கிளையை சென்றடைய வேண்டுமோ அந்த வங்கிக்கிளை வரையப்பட்ட கிளை (Drawee branch) அல்லது சென்றடையும் கிளை (Destination branch) எனப்படும். காசோலைக்கு பணம் செலுத்தப்பட்டவுடன் ஏற்பு வங்கி, சமர்ப்பிக்கும் வங்கிக்கு அந்த பணத்தை அனுப்பும். ஏற்புவங்கியிடமிருந்து காசோலை பணமாக்கப்பட்ட தகவல் அறிக்கை கிடைத்ததும் வாடிக்கையாளரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இப்படித்தான் ஏற்புமுறையில் காசோலைக்கான தீர்வு கிடைக்கிறது. தீர்வுக்காக காசோலைகள் ஏற்கப்படும்போது காசோலைகள் பணமாக்கப்பட்டவுடன்தான் வாடிக்கையாளர் கணக்கில் அது வரவு வைக்கப்படும்.

பணமாக்குவதற்காக காசோலை சென்றடையவேண்டிய நகரத்தில் ஏற்புமுறை இல்லையென்றால், சமர்ப்பிக்கும் வங்கிக்கிளை நேரிடையாக காசோலையை சென்றடைய வேண்டிய கிளைக்கு அனுப்பும்.  அந்தக்கிளையிலிருந்து உரியதொகை கிடைத்த பின்னரே, சமர்ப்பிக்கும் கிளை வாடிக்கையாளர் கணக்கில் தொகையை வரவு வைக்கும்.

4. (i) ஏற்புமுறையில் வெளியூர் காசோலையை கணக்கில் வரவுவைக்க எவ்வளவு கால அவகாசம் ஆகிறது?

ஏற்புமுறையில் பொதுவாக ஒரு வாரத்திலிருந்து மூன்று வாரங்கள் வரை கால அவகாசம் ஆகிறது.  தேசிய தீர்வு முறையில் சுமார் ஒரு வாரம் கால அவகாசம் ஆகிறது.

5. உள்ளூர் காசோலைகள் எங்ஙனம் தீர்வு செய்யப்படுகிறது ?

66 பெரிய நகரங்களில் உள்ளூர் காசோலைகள் இயந்திர வசதியுடனும் காந்தமை தொழில்நுட்பத்துடனும் தீர்வு செய்யப்படுகின்றன.
தீர்வகத்தின் செயல்பரப்பு எல்லைக்குள் அமைந்த வங்கிக்கிளைகளுக்குள் காசோலைகள் தீர்வு செய்யப் படுகின்றன. பொதுவாக தீர்வகத்திற்கும் பங்கேற்கும் வங்கிக்கிளைகளுக்கும் இடையேயான தூரம் வரையறுக்கப் படுகிறது. காசோலைகள் இந்த இரு இடங்களுக்கு இடையேயும் அனுப்பப்படுவதால் அந்நகரத்திலுள்ள போக்கு வரத்து மற்றும் தொலை தொடர்பு வசதிகளுக்கு ஏற்ப செயற்பரப்பு எல்லை நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக மும்பை தீர்வகத்தில் காசோலைகள் சமர்ப்பிக்கப்படும்போது சமர்ப்பிக்கும் வங்கிக்கிளையும் காசோலை வரையப்பட்ட வங்கிக்கிளையும் மும்பை தீர்வக பரப்பெல்லைக்குள் அமைந்திருப்பது அவசியம்.

6. காசோலைக்கான துரித தீர்வு எவ்வாறு செயல்படுகிறது ?

”கோர்-பாங்கிங்” என்னும் முறையில் வங்கிக்கிளைகள் கணினியால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இவ்வாறு வங்கிக் கிளைகள் ஒருங்கிணைக்கப்படும்போது வரையப்பட்ட வங்கிக்கு காசோலையை அனுப்புதல் என்பது தேவையற்ற ஒரு நடைமுறையாகி, ஒருங்கிணைக்கப்பட்ட கிளைகளுள் எந்த ஒரு கிளையிலும் காசோலைக்கான பணத்தை கொடுப்பது சாத்தியமாகிறது.   காந்தமை தொழில்நுட்பமும் கணினியால் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிக் கிளைகளும் காசோலைக்கான துரித தீர்வு முறையை எளிதாக்குகிறது.

வெளியூர் காசோலை, கணினியால் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிக்கிளைக்கு வரையப்பட்டிருந்தால் உள்ளூர் தீர்வகங்களில் காசோலைக்கான துரித தீர்வு முறையில் அவை பணமாக்கப்படலாம். காசோலை வரையப்பட்ட வங்கிக்கு உள்ளூரில் ஒரு கிளை இருத்தல் அவசியம்.

7. காசோலைக்கான துரித தீர்வு முறையில் பயனடைபவர்கள் எப்போது பணத்தைப் பெறுவர்?

உள்ளூர் காசோலைகள் தற்போது T+1 வேலை நாட்களில் தீர்வு செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து T+1 அல்லது 2 வேலைநாட்களில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். T என்பது நடவடிக்கை நாள் (Transaction date). அதாவது தீர்வகத்தில் காசோலை சமர்ப்பிக்கப்பட்ட நாளாகும். எனவே வெளியூர் காசோலைகளுக்கும் காசோலைக்கான துரித தீர்வு முறையில் T+1 அல்லது 2 வேலைநாட்களில் பணம் வரவு வைக்கப்படும். 

8. காசோலைக்கான துரித தீர்வு முறை தற்போது எங்கு நடைபெறுகிறது ?

துரித தீர்வு மையங்களின் பட்டியல் பின்வரும் இணையதளத்தில் உள்ளது.  http://rbidocs.rbi.org.in/rdocs/content/Docs/LSCC170211.xis.

9. காசோலைக்கான துரித தீர்வு முறைக்கான  கட்டணம் என்ன ?

சமர்ப்பிக்கும் வங்கிக்கிளைகள், ரூ.1,00,000க்கும் மேலான காசோலைகளுக்கு, சேவை வரி தவிர அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கிய கட்டணமாக ரூ.150க்கு மிகாமல் வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றன. ரூ1,00,000 வரையுள்ள காசோலைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. ஏப்ரல் 1,2011 முதல் வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கிலிருந்து அளிக்கப்படும் காசோலைகளில் ரூ1லட்சம் மற்றும் அதற்கு குறைவாகவுள்ள காசோலைகளுக்கு துரித தீர்வுக்கட்டணம் கிடையாது.  வங்கிகள் இதர கணக்குகளோடுத் தொடர்புடைய காசோலைகளுக்கு எந்த தொகைக்கும் சேமிப்புக் கணக்கோடு  தொடர்புடைய காசோலைகளுக்கு ரூ.1 லட்சத்திற்கு மேலும் கட்டணங்கள் வசூலிக்கலாம்.  கட்டணங்கள் நியாயமானதாகவும் செலவின் அடிப்படையில் அமைவதாகவும் (தொகையில் 1சதவீத அடிப்படையில் இல்லாமல்) இருந்திட வேண்டும்.

10. தேசிய தீர்வு முறையை விட காசோலைக்கான துரித தீர்வு முறை எப்படி சிறந்தது ?

காசோலை வரையப்பட்ட வங்கிக்கிளை இருக்கும் இடத்தைப்பொறுத்து ஏற்பு முறையில் வெளியூர் காசோலைகள் தீர்வு செய்யப்படுவதற்கு முதல் 3 வாரங்கள் ஆகலாம்.  துரிதத் தீர்வு முறையில் T+1 அல்லது 2  நாட்கள் அதாவது 48 மணிநேரத்துக்குள் அவை தீர்வு செய்யப்படும்.  ரூ. 1,00,000 வரையுள்ள காசோலைகளுக்கு தீர்விற்காக வாடிக்கையாளர்கள் எந்த சேவைக்கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.  ஆனால் ஏற்பு முறையில் வெளியூர்  காசோலைகளுக்கு சேவைக்கட்டணம் உண்டு.

11. துரிதத் தீர்வு முறையில் ஒரு காசோலை தீர்வு செய்யப்பட முடியுமா என்பதை ஒரு வாடிக்கையாளர் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

வாடிக்கையாளர்கள் அறியும்பொருட்டு மொத்த வங்கி சேவை (CBS) அளிக்கும் வங்கிகள் CBS என்ற முத்திரையை காசோலைகளில் அடித்து வைக்க வேண்டும். 10 இலக்கங்களுக்கு மேல் சேமிப்பு கணக்கு எண் இருந்தால், அது காசோலை மீது அச்சடிக்கப்பட்டிருந்தால் அதைக் கொண்டும் அறிந்துகொள்ள முடியும்.  மேலும் வாடிக்கையாளர்கள் துரிதத் தீர்வு முறை வசதி உள்ள வங்கிக்கிளைகளின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கியின் பின்வரும் http://www.rbi.org.in/Scripts/bs-viewcontent.aspx?Id=2016 இணைய தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

12. துரிதத் தீர்வு முறையில் எந்தெந்த வகையான காசோலைகள் தீர்வு செய்யப்படும்?

அரசு காசோலைகள் தவிர, எல்லாவிதமான பரிவர்த்தனைக்குரிய CBS சேவையுடைய வங்கிக்கிளைகள் மீது வரையப்பட்ட அனைத்து உபகரணங்கள் துரிதத் தீர்வு முறைக்குத் தகுதியானவை. 

பொறுப்பு அறிவிக்கை:

துரிதத் தீர்வு முறை குறித்து வாடிக்கையாளருக்கு பொதுவான விழிப்புணர்வை ஊட்டிட இந்த கேள்விபதில் பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது.  வாடிக்கையாளர்கள் மேலும் விவரம் அறிய வங்கிக்கிளைகளை தொடர்பு கொள்ளலாம்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்