Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (167.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/09/2015
இந்திய ரிசர்வ் வங்கி, சிறு நிதி வங்கிகளுக்கான 10 விண்ணப்பதாரர்களுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது

செப்டம்பர் 16, 2015

இந்திய ரிசர்வ் வங்கி, சிறு நிதி வங்கிகளுக்கான 10 விண்ணப்பதாரர்களுக்கு
கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது

சிறு நிதி வங்கிகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து நவம்பர் 27, 2014 அன்று வெளிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி கீழ்க்கண்ட 10 விண்ணப்பதாரர்களுக்கு சிறு நிதி வங்கிகள் நிறுவிட, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்க இன்று முடிவு செய்துள்ளது.

1. ஔ பைனான்ஸியர்ஸ் (இந்தியா) லிட்., ஜெய்ப்பூர்
2. கேபிடல் லோக்கல் ஏரியா பேங்க் லிட்., ஜலந்தர்
3. திஷா மைக்ரோபின் பிரைவேட் லிட்., அகமதாபாத்
4. ஈக்விட்டாஸ் ஹோல்டிங்ஸ் பி. லிட்., சென்னை
5. ESAF மைக்ரோபைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிட்., சென்னை
6. ஜனலக்ஷ்மி பைனான்ஸியல் சர்வீஸஸ் பிரைவேட் லிட்., பெங்களூரு
7. RGVN (North East) மைக்ரோபைனான்ஸ் லிட்., கௌஹாத்தி
8. சூரியோதய் மைக்ரோ பைனான்ஸ் பிரைவேட் லிட்., நவி மும்பை
9. உஜ்ஜிவன் பைனான்ஸியல் சர்வீஸஸ் பிரைவேட் லிட்., பெங்களூரு
10.உத்கர்ஷ் மைக்ரோ பைனான்ஸ் பிரைவேட் லிட்., வாரணாசி

கொள்கை அளவிலான இந்த ஒப்புதல் 18 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இந்தக் காலகட்டத்தில், விண்ணப்பதாரர்கள் வழிகாட்டுதல்களில் கூறப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி விதிக்கும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திட இது அவகாசமாளிக்கும். இந்த விண்ணப்பதாரர்களுக்குக் கொள்கை அளவில் அளிக்கப்பட்ட ஒப்புதலின் ஒரு அங்கமாக விதிக்கப்பட்ட இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துவிட்டார்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி திருப்தியடைந்துவிட்டால், வங்கிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1949-ன் சட்டப் பிரிவு 22(1)-ன்கீழ் வங்கி வர்த்தகத்தைத் தொடங்கும் உரிமத்தை அளித்திடக் கருதிடும். அத்தகைய வழக்கமான உரிமம் கிடைக்கும் வரை, விண்ணப்பதாரர்கள் எந்தவிதமான வங்கி வர்த்தகத்தையும் மேற்கொள்ளமுடியாது.

தேர்வு செய்யும் முறை:

ஒவ்வொரு விண்ணப்பத்தையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியபின், அதன் அடிப்படை.யில் பெறப்பட்ட தகவல்களின் பின்புலத்தில் இதற்காக அமைக்கப்பட்ட மூன்று குழுக்களின் பரிந்துரைகளின் பேரில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு முறையில் பின்வரும் படித்தளங்கள் உள்ளன. எல்லா விண்ணப்பங்களின் பேரில் முதல் கட்ட கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. வழிகாட்டுதல்களில் குறிப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கியின் குழு விண்ணப்பதாரரின் தகுதியை ஆய்வு செய்தது. முதலில் தேவைப்படும் குறைந்தபட்ச மூலதனத்தை சேகரிக்கும் திறன், நிறுவன சொந்தகாரர்களின் நிலைப்பாடு, இந்தியக் குடிமக்கள் அதன் மீது கொண்டுள்ள ஆளுமை ஆகியவற்றை இந்தக் குழு ஆய்வு செய்தது. இதன் முடிவுகள் ‘வெளி ஆலோசனைக் குழு’ (EAC) விடம் சமர்ப்பிக்கப்பட்டன. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் திரு.உஷாதோரட் அவர்கள் தலைமையில் இந்த EAC அமைக்கப்பட்டது. EAC பரிந்துரைத்த விண்ணப்பங்கள் முதல்கட்ட தகுதி மற்றும் வழிகாட்டுதல்கள் இரண்டையும் கருத்தில் கொண்டு விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விண்ணப்பதாரரின் நிதி வளம், வர்த்தகத்திற்காக முன்ம1ழியும் திட்டம் நிறுவனத்தின் நிர்வாகத் திறன் மற்றும் நெறிமுறை குறித்து நெறிமுறையாளர்களிடமிருந்தும் வங்கிகள் மற்றும் புலனாய்வு முகமைகளிடமிருந்தும் பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சரியாகவும், நேர்மையாகவும் அவை உள்ளனவா என்றும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை வங்கிகள் நுழையாத இடங்களில் நுழைவதும், குறைவான அளவில் வங்கிச் சேவைகள் பெற்ற மக்களை அணுகுவதற்குமான நிறுவனத்தின் திறனைக் கருத்தில் கொள்வது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் குறித்து அளிக்கப்பட்ட விரிவான ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் EAC-யால் பலமுறை கூட்டம் கூட்டி விவாதங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் EAC இந்திய ரிசர்வ் வங்கியிடம் தனது பரிந்துரைகளை அளித்தது.

இதற்குப் பின்னர் ‘உள்ளகத் தேர்வுக் குழு’ (ISC) ஒன்று, ஆளுநர் தலைமையில் நான்கு துணை ஆளுநர்களுடன் இணைந்து விண்ணப்பங்களைப் பரிசீலித்தது. EAC அளிக்கும் பரிந்துரைகளுக்கான காரண காரியங்களை அலசி ஆய்ந்தது. அனைத்து விண்ணப்பங்களையும் இவ்வாறு பரிசீலித்த பின்னர், இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றத்தின் குழுவிற்குத் தனது பரிந்துரைகளை அளித்தது. செப்டம்பர் 16, 2015 அன்று கூடிய மத்தியமன்றத்தின் குழுக்கூட்டத்தில், அதன் வெளி அங்கத்தினர்கள் EAC மற்றும் ISC-யின் குறிப்புகள், பரிந்துரைகளைப் பார்வையிட்டது. இவற்றிற்குப் பின் கொள்கை அளவிலான ஒப்புதல் அளிக்கும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் முடிவு செய்யப்பட்டது. EAC-யின் தலைவர் தனது பரிந்துரைகளுக்கான காரணங்களை விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இவ்வாறு உரிமம் அளிப்பதற்காக மேறகொள்ளப்பட்ட ஆய்வுகளால் கிடைத்த படிப்பினையைக் கொண்டு வழிகாட்டுதல்களில் திருத்தங்கள் செய்யவும், சீராக அதிகமான அளவில் எப்போதும் உரிமம் அளிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.

பின்புலம்

ஆளுநர் முனைவர் ரகுராம் G. ராஜன் அவர்கள் தலைமையிலான நிதித்துறை சீர்திருத்தக் கமிட்டி 2009-ல் இந்தியாவில் சிறிய வங்கிகளின் பங்களிப்பு பொருத்தமானதா என்பது குறித்து ஆராய்ந்ததை இப்போது நினைவு கூறலாம். சிறுவங்கிகளுக்கு உரிமம் அளிப்பதை, பரிசோதனை முயற்சியாக மேற்கொள்வதற்கு ஏற்ற தேவையான சூழ்நிலை மாற்றம் இந்தியாவில் உள்ளதாகக் கமிட்டி கருதியது. தனியார் துறையிலுள்ள நன்கு நிர்வகிக்கப்பட்ட வைப்புகளை (டெபாசிட்டுகள்) ஏற்கும் சிறு நிதி வங்கிகளை அதிகம் அனுமதிக்க கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. வங்கிகள் பூகோள ரீதியாக ஒரே இடத்தில் குவிந்திருப்பதாலும், அதிகமான மூலதனம் தேவைப்படுவதாலும், தொடர்புடைய நபரிகளின் பரிவர்த்தனைகளாலும், சில துறைகள் / நபர்கள் வசம் கடன் / வைப்பு குவிவதாலும் ஏற்படக்கூடிய நேரிடர்களை இது ஈடுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வங்கிகளின் வடிவமைப்பு குறித்த கொள்கை முடிவுகள் தொடர்பான விவாதங்களில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது. இந்த விவாதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் ஆகஸ்ட் 27, 2013 அன்று முன்வைக்கப்பட்டன.

ஜூலை 10, 2014 அன்று யூனியன் பட்ஜெட் 2014–2015-ஐ சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் பின்வருமாறு அறிவித்தார் -

“தற்போது உள்ள சட்டவடிவமைப்பில் தேவையான மாற்றங்களை செய்து, முழுஅளவிலான சர்வதேச வங்கிகளுக்குத் தனியார் துறையில் தொடர்ந்து செயல்பட அதிகாரமளிக்கும் ஒரு அமைப்பு முறை உருவாக்கப்படும். சிறிய வங்கிகள் மற்றும் பலவிதமான இதர வங்கிகளுக்கு உரிமம் அளிக்கும் ஒரு சட்ட உருவரையை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கிடும். தனித்துவமான சேவைகளை அளிக்கவும், பிராந்தியப் பகுதிகளுக்கு சேவைகள், பட்டுவாடா ஆகியவற்றிற்கான சிறப்பு வங்கிகள் உருவாகும். அவை, சிறுவணிகர்கள், முறைசாரா துறையினர், குறைந்த வருவாயுடையோர், விவசாயிகள், புலம்பெயரும் தொழிலாளர் ஆகியோருக்கு நிதிசேவையளிக்க இந்த வங்கிகள் உதவிடும்.“

ஜூலை 17, 2014, சிறு நிதி வங்கிகள் உரிமம் குறித்த வழிகாட்டுதல்களின் கருத்துரு பொதுமக்களின் ஆலோசனைகளுக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. அதன்மீது கிடைத்த குறிப்புகள், ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதியான வழிகாட்டுதல்கள் நவம்பர் 27, 2014 அன்று வெளியிடப்பட்டது. மேலும், இவை குறித்து எழுந்த 176 கேள்விகளுக்கு விளக்கங்களையும், விடைகளையும் இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2015 அன்று வெளியிட்டது. சிறு நிதி வங்கிகளுக்கான 72 விண்ணப்பங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் பெறப்பட்டன. இதன் பின்னர் மைக்ரோசெக் ரிஸோர்ஸஸ் பிரைவேட் லிட்., கொல்கத்தா தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. திரு.அஜய்சிங் பிம்பெட் மற்றும் இதர நபர்கள் நிறுவனத்தின் இரண்டு இணை ஊக்குவிப்பாளர்கள் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால், அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் திரும்பப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்பட்டது.

கூடுதல் விவரங்கள்

முதல்கட்டமாக, தேர்ந்தெடுக்கத் தேவையான தகுதிகளைப் பரிசீலித்தபின், விண்ணப்பங்கள் இதற்காக அமைக்கப்பட்ட, வெளி ஆலோசனைக் குழு (EAC)-விற்கு அனுப்பப்படும் என்று வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பங்களைத் தேர்வு செய்யவும், வழிகாட்டுதல்களின்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வோருக்கு மட்டுமே உரிமம் வழங்கவும் பிப்ரவரி 4, 2015 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் திருமதி உஷா தோரட், அவர்கள் தலைமையில், வெளி ஆலோசனைக் குழு (EAC) ஒன்று அமைக்கப்பட்டது. வெளி ஆலோசனைக் குழு (EAC)வின் 3 உறுப்பினர்கள் – திரு.M.S.சாஹு முன்னாள் SEBI அங்கத்தினர், திரு. M.S. ஸ்ரீராம், Professor, IIM, பெங்களூரு மற்றும் திரு.M.பாலசந்திரன், தலைவர், National Payments Corporation of India. பின்னர் திரு.M.S.சாஹு Competition Commission of India-வின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டதால், கமிட்டியிலிருந்து விலக நேரிட்டது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 2015ல் திரு.ரவி நாராயண், உப-தலைவர், National Stock Exchange of India Ltd. அவர்களைக் கமிட்டியின் உறுப்பினராக நியமித்தது.

அல்பனா கில்லவாலா
முதன்மைத் தலைமைப் பொது மேலாளர்

PRESS RELEASE: 2015 – 2016/693

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்