RBI/2009-10/103
DBOD. Leg. No.BC.24/09.07.005/2009-10
ஜூலை 21, 2009
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராம வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்,
வங்கிகளின் குறைதீர்ப்பு முறைமை – வங்கி குறைதீர்ப்பாளர்
திட்டம் 2006ன்கீழ் நியமிக்கப்பட்ட தொடர்பு அதிகாரிகளின்
பெயர்களை பார்வைக்கு வைத்தல்
DBOD. Leg. No.BC.9/09.07.006/2009-10, 2009 ஜூலை 1 தேதியிட்ட வாடிக்கையாளர் சேவை பற்றிய எங்களது தொகுப்பு சுற்றறிக்கையின் பத்தி 16.5(v)ஐப் பார்க்கவும். இதன்படி வங்கிகள் தங்களது கிளைகளில், குறைகளைத் தீர்த்து வைக்க, அணுக வேண்டிய அதிகாரிகளின் பெயர்கள், அவர்களது நேரடி தொலைபேசி எண், தொலைநகல் எண், முழுமையான முகவரி (தபால் பெட்டி எண் அல்ல) மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அனைவர் கண்களிலும் படும்படியான இடத்தில் வைத்திட வேண்டும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் உரிய நேரத்தில் முறையாகத் தொடர்பு கொள்ளமுடிவதால் குறை தீர்ப்பு முறைமையின் திறன் மேம்படும். மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் பத்தி 8.3-1 அறிவுறுத்துவது என்னவென்றால், வங்கியின் குறைதீர்ப்பு முறையால் திருப்தி அடையாத வாடிக்கையாளர் அணுகவேண்டிய (i) கிளை மட்டத்திலான அதிகாரிகள் (ii) பிராந்திய/மண்டல அலுவலகங்களில் அணுகவேண்டிய அதிகாரிகள் (iii) வங்கி குறைதீர்ப்பாளரின் தொடர்பு விவரங்கள் ஆகியவை விரிவான அறிவிப்புப் பலகையில் இடம் பெறவேண்டும்.
2. வங்கி குறைதீர்ப்பாளர் திட்டம் 2006ன் பத்தி 15(3)ன் படி குறைதீர்ப்பு முறைமையை வலுப்படுத்த, கிளைமட்ட அளவில் பார்பதற்கு வைக்கப்படும் அதிகாரிகளின் பெயர்களோடு இது சம்பந்தமாக பிராந்திய/மண்டல அலுவலகங்களின் அளவில் உள்ள தொடர்பு அதிகாரியின் பெயரையும் சேர்ப்பது அத்தியாவசியமாகிறது.
3. எனவே வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுவது என்னவென்றால் குறைகள் தீர்க்கும் அதிகாரிகளின் பெயர்களை பார்வைக்கு வைக்கும்பொழுது அப்பகுதிக்கு உரிய வங்கி குறைதீர்ப்பாளர் திட்டம் 2006ன்கீழ் உள்ள தொடர்பு அதிகாரியின் பெயரும் அதில் சேர்க்கப்படவேண்டும்.
4. வங்கிகள் தங்களது இணையதளங்களில் தலைமை அலுவலக/பிராந்திய அலுவலகங்கள்/மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் புகார்களை தீர்த்து வைக்கும் அதிகாரிகளின் பெயர்களைப் பார்வைக்கு வைக்க வேண்டும். அப்பட்டியலில் வங்கி குறைதீர்ப்பாளர் திட்டம் 2006ன்கீழ் உள்ள தொடர்பு அதிகாரிகள்/முதன்மை தொடர்பு அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறவேண்டும்.
5. வங்கிகள் தங்களது இணையதளங்களில் தங்களது தலைமை நிர்வாக இயக்குநர் (CMD- Chief Managing Director) தலைமை செயல் அலுவலர் (CEO – Chief Executive Officer) இவர்களது பெயர்கள், முகவரி, தொலைபேசி/தொலைநகல் எண் ஆகியவற்றை இடம்பெறச் செய்யவேண்டும். இதோடு தேவைப்பட்டால் வாடிக்கையாளர் தொடர்பு கொள்ள வசதியாக கடன் அட்டைகள், கடன்கள் மற்றும் முன்தொகைகள், சில்லறை வங்கியியல், தனிப்பட்ட வங்கியியல் கிராமிய/விவசாய வங்கியியல் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான வங்கியியல் இவை குறித்த செயல்பாட்டுத் துறைத் தலைவர்களின் பெயர்கள், முகவரி, தொலைபேசி/தொலைநகல் எண் ஆகியவற்றையும் அதில் இடம்பெறச் செய்யவேண்டும்.
தங்கள் உண்மையுள்ள
(B.மஹாபத்ரா)
தலைமைப் பொது மேலாளர்
|