RBI/2008-09/249
Ref.DGBA.CDD.No.H-3854/13.01.299/2008-09
அக்டோபர் 24, 2008
தலைமைப் பொது மேலாளர்
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கூட்டாளி வங்கிகள்
17 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
தலைமை நிர்வாக இயக்குநர்
ஆக்ஸிஸ் பேங் லி./ எச்டிஎப்சி வங்கி லி. / ஐசிஐசிஐ வங்கி லி.
/ ஐடிபிஐ வங்கி லி. / SHCIL
அன்புடையீர்
நிவாரண / சேமிப்புப் பத்திரங்கள் - வாடிக்கையாளரின் உரிமைகள்
ஏப்ரல் 22, 2004 தேதியிட்ட No.RBI/2004/181 (Ref.No.DGBA.CO.DT. No.13. 01. 299 /H-6252/2003-04) சுற்றறிகையைப் பார்வையிடமும். இதன்படி முகவர் வங்கிகள் நிவாரண மற்றும் சேமிப்புப்பத்திரங்களுக்கான முதலீட்டு விண்ணப்படிவங்களை ஒரே மாதிரியான தரமுடையதாக, அதில் முதலீட்டார்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை உள்ளடக்கியதாக வடிவமைத்திட வேண்டும்.
2. இது தொடர்பாக வங்கி திரு. எச். பிரபாகர் ராவ் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாகவோ, வங்கிகள் / நிறுவனங்கள் மூலமாகவோ ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகளை ஆய்வுசெய்திடவும், அவற்றிற்கு உரிய கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை அவர்களுக்கு ஏற்புடையதாகும் வகையில் மறுஆய்வு செய்திடவும் இந்த குழு நிறுவப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சேமிப்புப்பத்திரங்களுக்கான விண்ணப்பப்படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதலீட்டாளர்களின் உரிமைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். முதலீட்டாளருக்கு முதிர்வுத் தேதி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற தகவலையும், மேலும் ஒரு முகவர் வங்கியிலிருந்து கணக்கினை மற்றொரு முகவர் வங்கிக்கு மாற்றிக்கொள்ள முதலீட்டாளருக்கு உரிமை அளித்திட வேண்டும். முதிர்வுத் தொகையை திருப்பித் தருவதில் தாமதம் இருந்தால், வட்டி (சேமிப்புக் கணக்கின் மீதுள்ள வட்டி விகிதத்தில்) அளிக்கப்படும் என்பன போன்ற தகவல்களை விண்ணப்படிவம் தாங்கிவரவேண்டும்.
3. அந்தக் குழுவின் பரிந்துரைகள் ரிசர்வ் வங்கியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி 8% சேமிப்பு (வரிவிதிப்புக்கு உட்பட்ட) பத்திரங்கள் 2003-ஐ வெளியிட்டு மற்றும் பராமரிக்கும் முகவர் வங்கிகள் பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ளபடி திருத்தப்பட்ட உரிமைகளின் பட்டியலை விண்ணப்பப் படிவத்தில் சேர்க்கவேண்டும்.
4. பெருவாரியான வங்கிகளில் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் பத்திரங்கள் வெளியீடு மற்றும் பராமரிப்பு தொடர்பான வேலைகள் (இதர வேலைகள் கணினிமூலம் செய்யப்பட்டபோதிலும்) முழுவதுமாக கணினிமயமாக்கப்படவில்லை என்பதை இக்குழு கவனித்துப் பதிவு செய்துள்ளது. பிழைகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அல்லது முதலீட்டாளருக்கு நஷ்டம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் தாமதங்கள் ஆகியவற்றை குறைக்கும்பொருட்டு முகவர் வங்கிகள் சேமிப்பு பத்திரங்களை காலத்தே பராமரிப்பதை உறுதி செய்யும்வகையில் (முன்னரே செய்திராவிட்டால்) இந்தப் பராமரிப்பு தொடர்பான பணிகளை முழுவதுமாக எந்திரமயமாக்கும்படி முகவர் வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.
5. மின்னணு சேவைமுறை (ECS and NEFT) மூலமாக சேமிப்புப் பத்திரங்களுக்கு உரிய வட்டி மற்றும் முதிர்வுத் தொகையை முதலீட்டாளருக்கு அனுப்பிவைக்க வசதியாக முதலீட்டாளரின் வங்கிக் கணக்கு குறித்த தகவலை பெற்றிட வங்கிகள் முனைந்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்று இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து செப்டம்பர் 24, 2007 தேதியிட்ட சுற்றறிக்கை எண். DGBA.CDD.No.H-3249/13.01.299/2007-08-ஐ பார்வையிடும்படி கேட்டுக்கொள்கிறோம். இதன்படி முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் அசலை அனுப்பிட முகவர் வங்கிகள் ECS/EFT வசதிகளை உபயோகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை இவற்றை செயல்படுத்திடாத முகவர் வங்கிகள் உடன்டியாக செயல்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எங்கெல்லாம் ECS /NEFT/RTGS வசதிகள் உள்ளனவோ அவற்றை உபயோகித்து முகவர் வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு பணஅனுப்பீடுகளை செய்திடும்படி முகவர் வங்கிகள் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
6. உங்களின் நியமிக்கப்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளும் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுவதை உறுதிசெய்திட வேண்டும்.
7. பெற்றுக்கொண்டதற்கு ஒப்புதல் அளிக்கவும்.
தங்கள் உண்மையுள்ள
(டாக்டர் கே.பாலு)
துணைப் பொது மேலாளர்
பிற்சேர்க்கை
முதலீட்டாளரின் உரிமைகள்
- முதலீட்டாளரிடமிருந்து தொகை ரொக்கப் பணமாகப் பெற்றுகொள்ளப்பட்டால் பத்திரம் அதே நாளில் அளிக்கப்படும். தொகை காசோலை மூலமாக பெறப்பட்டால், காசோலை பணமாக்கப்பட்ட தேதியிலிருந்து பத்திரம் வழங்கப்படும்.
- பத்திரவைப்புச் சான்றிதழ் விண்ணப்பம் கொடுத்ததிலிருந்து 5 நாட்களுக்குள் வழங்கப்படும்.
- முதலீட்டுக்கான பணம் ரொக்கமாகக் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து அல்லது காசோலை பணமாக்கப்பட்ட நாளிலிருந்து முதலீட்டின்மீது வட்டி கணக்கிடப்படும். அரையாண்டு வட்டி கொடுப்பு ஆணைகள் குறிக்கப்பட்ட தேதிக்கு ஒரு மாதம் முன்னதாகவே அளிக்கப்படும்.
- பெப்ரவரி 1/ஆகஸ்ட் 1 தேதியில் வட்டி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கொடுப்பாணை மூலமாக அளிக்கப்படுமாயின் அவை கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
- வட்டி கொடுக்கப்படுவதற்கான தகவல் முதிர்வுத் தேதிக்கு ஒரு மாதம் முன்னதாகவே அனுப்பி வைக்கப்படும்.
- பத்திர முதிர்வுக்கான தகவல் முதிர்வுத் தேதிக்கு ஒரு மாதம் முன்னதாகவே அனுப்பி வைக்கப்படும்.
- முதலீட்டாளர் ஊரகப் பகுதிகளில் வசிப்பவரானால், அவருக்கு வட்டி மற்றும் அசலை கட்டணம் ஏதுமில்லாத கேட்போலை அல்லது மதிப்பிலேயே மாற்றிக்கொள்ளமுடிந்த காசோலையாக வழங்கிட வசதிகள் உண்டு.
- ஒரே வங்கியின் வேறு கிளைகளுக்கோ அல்லது வெவ்வெறு வங்கியின் கிளைகளுக்கோ பத்திர கணக்குகளை மாற்றிக்கொள்ள வசதிகள் உண்டு.
- சேமிப்பு பத்திரங்களுக்கான முதலீடு விண்ணப்பம், முதிர்வுத் தொகை பெறுதல், மின்னணு சேவைக்கான உரிமைக் கட்டளை படிவம் (ECS) ஆகியவை வங்கிகள் மற்றும் SHCIL-ன் இணையதளத்தில் கிடைக்கும்.
- பத்திரத்தின் ஒரு தனி முதலீட்டாளர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர் ஒருவரையோ அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களையோ வாரிசுதாரர்களாக நியமித்து அந்த பத்திரங்களின் மதிப்பை அவர்கள் பெற வழி செய்யலாம். குடியிருப்பாளர் அல்லாத இந்தியரையும் வாரிசுதாரராக நியமிக்கலாம்.
- பத்திரங்கள் வழங்கிய அலுவலகத்தில் வாரிசுதாரர் நியமனம் பதிவு செய்யப்படும். அந்த பதிவுக்கான சான்றிதழும் அவரிடம் கொடுக்கப்படும்.
- வாரிசுதாரர் நியமனத்தை மாற்ற நினைத்தால் அப்போது புதிய நியமனத்தை பதிவு செய்திடலாம்.
- பத்திரங்கள் வழங்கிய அலுவலகத்திற்கு ஒரு வேண்டுதல் கடிதம் எழுதி நடப்பில் இருக்கும் வாரிசு நியமனத்தை ரத்து செய்திடலாம்.
-
- முதலீடு செய்த தேதியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குப்பின் பத்திர முதலீடுகள் முதிர்வடையும்.
- முதலீட்டாளர் மின்னணு சேவை மூலம் முதலீட்டின் பணத்தைத் திரும்பப் பெற உரிமைக் கட்டளை (ECS mandate) கொடுத்திருந்தால் முதிர்வுத் தேதியன்று உடனடியாகத் தானாகவே அந்த தொகை முதலீட்டாளர் கணக்கில் வரவில் வைக்கப்படும். அவ்வாறில்லாத பட்சத்தில் அலுவலகத்தில் ரசீது அளித்து பத்திரத்தை முதலீட்டாளர் திருப்பித் தந்த 5 முழுவேலை நாட்களுக்குள் முதலீட்டின் முதிர்வுத் தொகை வழங்கப்பட்டு விடும்.
- ECS/NEFT/RTGS போன்ற மின்னணு சேவை முறைமைகளுக்கான வசதிகள் இருக்கும்பட்சத்தில் அரையாண்டு வட்டி மற்றும் முதிர்வுத் தொகையை முதலீட்டாளர் இவற்றைப் பயன்படுத்தியே பெறலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வினை விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு விபரங்களை அளிப்பதன் மூலம் வட்டி மற்றும் முதிர்வுத் தொகையைப் பெறுவதில் தாமதத்தை தவிர்க்கலாம்.
- முதலீட்டுக்குரிய தொகையைப் பெறுவதில் தாமதம் ஏற்படும்போது அதற்குரிய இழப்பீடாக நடப்பிலுள்ள சேமிப்புக்கணக்குக்குரிய வட்டி விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.
- முதலீட்டுப் பத்திரங்களை வழங்கும் அலுவலகம் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின்படி நடக்காவிட்டால், முதலீட்டாளர் எழுத்து வடிவில் ஒரு புகாரை அங்குள்ள முகப்பிலே படிவத்தைப் பெற்று அருகிலுள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திற்கு கீழ்க்குறிப்பிட்டபடி முகவரியின் மீது எழுதி அனுப்பலாம்.
மண்டல இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி, புகார் தீர்வு மையம்
(இடம்)
அல்லது பின்வரும் முகவரிக்கும் அனுப்பலாம் .
தலைமைப் பொது மேலாளர்
இந்தியரிசர்வ் வங்கி, மைய அலுவலகம்,
அரசு மற்றும் வங்கி கணக்குத்துறை
பைகுல்லா (மும்பை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் )
மும்பை 400 008, மஹாராஷ்டிரா |