Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (122.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 24/04/2008

வங்கிகளால் பணியமர்த்தப்படும் வசூல் முகவர்கள்

RBI/2007-2008/296
DBOD.No.Leg.BC.75/09.07.005/2007-08

April 24, 2008

அனைத்து பட்டியலிடப்பட்ட  வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்

2007-08-ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கொள்கை அறிவிப்பின் மீது
இடைக்கால சீராய்வு - வங்கிகளால் பணியமர்த்தப்படும் வசூல் முகவர்கள்

2007-08-ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கொள்கை அறிவிப்பின் மீது இடைக்கால சீராய்வின் பத்தி 172 மற்றும் 173-ஐ (நகல் இணைக்கப்பட்டுள்ளது) பார்வையிடுக.   சமீபகாலமாக வங்கிகள் வசூல் முகவர்களை பணியமர்த்தியது தொடர்பாக ஏராளமான சச்சரவுகள் மற்றும் வழக்குகள் வங்கிகளுக்கு எதிராக எழுந்தன.  இது குறித்த தவறான பிரச்சாரங்கள் வங்கித்துறை மொத்தத்தின் நற்பெயரை பாதிக்கக்கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது.  ஆகவே வங்கிகள் வசூல் முகவர்களை பணி நியமனம் செய்யும்பொழுது மேற்கொள்ளவேண்டிய கொள்கை, பழக்கவழங்கங்கள் மற்றும் நடைமுறைகளை திருத்தி அமைக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.  ரிசர்வ் வங்கி இது குறித்து வரைவு வழிகாட்டுதல்களை அனைவரின் ஆலோசனைகளுக்காக தனது இணையதளத்தில் வெளியிட்டது.  பெருவாரியாக வங்கிகள் / தனிநபர்கள் / நிறுவனங்கள் அளித்த கருத்துக்களைத் தொடர்ந்து வரைவு வழிகாட்டுதல்கள் ஏற்புடையதாக மாற்றியமைக்கப்பட்டு இறுதி வடிவம் பெற்றுள்ளது.  அந்த வழிகாட்டுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வசூல் முகவர்களை பணி அமர்த்துதல்

2.         வசூல் முகவர்களை பணி அமர்த்தும்பொழுது பின்வரும் குறிப்பிடத்தக்க விஷயங்களை கவனத்தில் கொள்ளுமாறு வங்கிகள் வலியுறுத்தப்படுகின்றன.

(i)         இந்த வழிகாட்டுதல்களில் முகவர்கள் என்ற சொற்றொடர், வங்கி நியமனம் செய்யும் முகமை நிறுவனங்கள், அவற்றின் முகவர்கள் மற்றும் பணியாளர்களைக் குறிக்கும். 

(ii)        வங்கிகள் மிகுந்த கவனத்துடன்கூடிய வழிமுறைகளைப் பின்பற்றி வசூல் முகவர்களை பணி அமர்த்த வேண்டும்.   அந்த வழிமுறைகள் குறிப்பாக வசூல் நடைமுறையில் ஈடுபடும் தனிநபர்களை பணி அமர்த்தும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டும்.  நிதிச் சேவைகளை வெளியார் வசம் ஒப்படைக்கும் வசதிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் நவம்பர் 3, 2006 தேதியிட்ட  DBOD.No.BP.40/21.04.158/2006-07 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.  மிகுந்த கவனத்தோடு வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையிலுள்ள வழிகாட்டுதல்களோடு பொருந்தக்கூடியதாக அமைந்திட வேண்டும்.  மேலும் வங்கிகள் வசூலில் ஈடுபடும் முகவர்களை பணி நியமனம் செய்வதற்கு முன் அவர்களின் பின்னணி, காவல்துறையிடம் அவர்கள் குறித்த விசாரணை ஆகியவற்றை மிகுந்த எச்சரிக்கையோடு செய்திடல் வேண்டும்.  வங்கிகள் அவர்களின் பின்னணி பற்றிய விசாரணையை மீண்டும் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் அதன் கால இடைவெளி பற்றியும் வங்கிகளே தீர்மானிக்க வேண்டும்.

(iii)       பணம் திருப்பி அளிக்கத் தவறிய கடனாளிகள் குறித்த தகவல்களை முகவர்களுக்கு அனுப்பும் முன்னரே, வங்கிகள் தங்களின் வசூல் முகமை நிறுவனங்கள், கம்பெனிகள் குறித்த தகவல்களை உரிய அதிகாரத்தோடு கடனாளிகளுக்கு முன்னறிவிப்பு செய்திடல் வேண்டும்.  இவ்வாறு வங்கிகள் கடனாளிக்கு அனுப்பும் தகவல் சில நேரங்களில் (மறுப்பு/தவிர்த்தல் / இல்லாமல் இருத்தல் / ஏதாவது ஒரு காரணத்தால்) சேராமல் போகலாம்.  ஆகவே பிரச்சனைகளைத் தவிர்த்திட வசூலுக்குச் செல்லும் முகவர் வங்கியிலிருந்து பெற்ற அங்கீகாரக் கடிதம் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை வசூலுக்குச் செல்லும்போது எடுத்துச் செல்வது உபயோகமாக இருக்கும்.   மேலும் வசூல் நடந்துகொண்டிருக்கும் கால கட்டத்தில் வங்கி முகமையை மாற்றக்கூடும்.  அது குறித்து வங்கி கடனாளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  இருப்பினும் புதிய முகவர் வசூலுக்குச் செல்லும்போது அடையாள அட்டை மற்றும் அங்கீகாரக் கடிதம் ஆகியவற்றை எடுத்துச் செல்வது அவசியமாகும்.   

(iv)       அறிவிப்புக் கடிதம் மற்றும் அங்கீகாரக் கடிதம் மற்ற தகவல்களை அளிப்பதோடு குறிப்பிடப்பட்டுள்ள வசூல் முகவரின் தொலைபேசி எண்களைத் தரவேண்டும்.  இவற்றோடு வசூல் முகவருக்கும் கடனாளிக்கும் இடையே நடக்கும் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து வைக்கும் வசதி இருப்பதை வங்கிகள் உறுதிசெய்திடல் வேண்டும்.  வங்கிகள் இதில் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு, மேற்குறிப்பிட்ட வசதி இருப்பதை வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். 
 
(v)        வங்கிகள் நியமிக்கும் வசூல் முகவை நிறுவனங்கள், கம்பெனிகள் குறித்த அவ்வப்போதிய தகவல்களை வங்கியின் இணையதளத்தில் வெளியிடலாம்.

(vi)       கடனாளி ஏதாவது குறை அல்லது புகார் பதிவு செய்திருந்தால் வங்கிகள் அத்தகு கடனாளிகள் குறித்த விபரங்களை அந்தப் புகார் அல்லது குறை தீர்வு செய்து முடிக்கப்படும் வரை வசூல் முகவர்களுக்கு அனுப்பக்கூடாது.  ஆனால் கடனாளி தொடர்ந்து சிறுமையான / எரிச்சலூட்டுகிற புகார்களை அளிக்கிறார் என்பது சான்றுகளுடன் உறுதிப்படுத்தப்படுமானால் வங்கிக்கு இது குறித்த உறுதிப்பாடு இருக்குமானால் இத்தகு புகார்கள் தீர்வுசெய்யப்படாமல் இருந்தாலும்  வசூல் செயல்முறையில் வங்கி இறங்கலாம்.  கடனாளியின் நிலுவை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடப்பிலிருக்குமானால், சூழலைப் பொறுத்து மிகுந்த எச்சரிக்கையுடன், உரியமுறையில் முகமை நிறுவனங்களி வங்கி நாடலாம். 

(vii)      வசூல் நடைமுறை குறித்து கடனாளிகள் அளித்திடும் புகார்களை தீர்வுசெய்ய ஒவ்வொரு வங்கியும் ஏதாவது ஒரு செயல்முறைமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  இந்த முறைமை குறித்த தகவல்களையும் கடனாளிக்கு முன்னர் (iii)-ல் குறிப்பிட்டதுபோல் முகவை நிறுவனம் குறித்த தகவல் அளிக்கும்போதே அனுப்பிட வேண்டும். 

வசூல் முகவர்களுக்கான ஊக்கத்தொகை

(viii)     சில வங்கிகள் வசூல் முகவர்களுக்கு மிக கடினமான இலக்கை நிர்ணயித்து அதிகமான ஊக்கத்தொகையையும் அளிக்க முன்வருவது தெரியவந்துள்ளது.  இதன் காரணத்தால் சில வசூல் முகவர்கள் அச்சுறுத்தும், வாதத்திற்கு இடமளிக்கும் முறைகளை கையாளுகின்றனர்.  ஆகவே வங்கிகள் வசூல் முகவை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது அநாகரிகமான, சட்டத்திற்கு புறம்பான, விவாதத்திற்கு இடமளிக்கும் வசூல் முறைகளை பின்பற்றுவதை தவிர்த்திடுமாறு அறிவுறுத்த வேண்டும். 

வசூல் முகவர்கள் பின்பற்றும் முறைகள்

(ix)  பின்வரும் சுற்றறிக்கைகளை பார்வையிடுக.  (a) கடனளிப்பவர் பின்பற்றவேண்டிய நெறிமுறைத் தொகுப்பு குறித்த  வழிகாட்டுதல்கள் - மே 5, 2003 தேதியிட்ட DBOD.Leg.No.BC.104/09.07.007 (b) நிதிச்சேவைகளை வெளியார் வசம் ஒப்படைத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் நவம்பர் 3, 2006 தேதியிட்ட DBOD.No.BP.40/21.04.158/2006-07  (c) கடன் அட்டை செயல்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்கள் ஜூலை 2, 2007 தேதியிட்ட DBOD.FSD.BC.17/24.01.01/2007-08 இவற்றோடு வாடிக்கையாளருக்குரிய வங்கியின் பொறுப்புகள் குறித்த நெறிமுறைத் தொகுப்பு பத்தி 6 (BCSBI Code).   வங்கிகள் கடன் வசூல் முறையை பின்பற்றும்போது மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

வசூல் முகவர்களுக்கான பயிற்சி

(x)        நவம்பர் 3, 2006 தேதியிட்ட சுற்றறிக்கை DBOD.No.BP.40/ 21.04.158/2006-07-யில் வங்கிகள் நிதியியல் சேவைகளை வெளியார் வசம் ஒப்படைப்பதில் உள்ள இடர்வரவுகளின் கண்காணிப்பு குறித்த வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளன.  வசூல் முகவர்கள் தங்களின் பொறுப்புகளை கவனமாகவும், கூறுணர்வுத்திறனுடனும் கையாளப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.  குறிப்பாக கடனாளிகளை அழைக்கும் நேரம் அவர்களின் தகவல் குறித்த ரகசியம் காத்தல் போன்ற விஷயங்களில் கவனத்தோடு நடந்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர் என்பதை வங்கிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். 

(xi) இந்திய வங்கியியல் மற்றும் நிதியியல் நிறுவனத்தின் Indian Institute of Banking and Finance-ன் ஆலோசனையுடன் நேரடி வசூல் முகவர்களுக்கு உரிய ஒரு சிறப்பான பயிற்சி படிப்பினை (குறைந்த பட்சம் 100 மணி நேரம்) இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு வடிவமைத்துத் தரவேண்டுமென்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.  இத்தகைய பயிற்சி படிப்பு IIBF-ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட பின் நேரடி வசூல் முகவர்கள் இத்தகு பயிற்சியினை மேற்கொண்டு உரிய சான்றிதழைப் பெறவேண்டுமென்பதை வங்கி உறுதிபடுத்திக்கொள்ளலாம்.   மேலும் வங்கிகள் நியமிக்கும் இத்தகு சேவை நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களையே வசூல் பணிகளில் அமர்த்தவேண்டும்.  நாடெங்கிலும் உள்ள ஏராளமான முகவர்கள் பயிற்சி பெற வேண்டியதுள்ளதால் IIBF உடன் ஒரு ஏற்பாட்டை செய்துகொண்டு வங்கிகள் வேறு நிறுவனங்கள் / தங்களின் பயிற்சிக் கல்லூரிகளிலேயே இத்தகு பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்யலாம்.  இதனால் பயிற்சியின் தரம் எல்லா இடங்களிலும் சீராக இருக்கும்.  எவ்வாறாயினும், ஒவ்வொரு வசூல் முகவரும், IIBF இந்தியா முழுவதிலும் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். 

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட சொத்தை கையகப்படுத்துதல்

(xii)      சமீபத்தில் உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கின்போது வசூலாகாத கடன்களை வசூலிக்கும்போது அல்லது வண்டிகள் போன்ற அடமானப் பொருட்களை கையகப்படுத்தும்போதும் சட்டப்பூர்வமான நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும்.  இவை அனைத்தும் நாட்டின் சட்டத்ததிட்டங்களுக்கு உட்பட்டவையே என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  இது தொடர்பாக  SARFAESI சட்டமும், அடமானப்பொருளில் உரிமைப்பற்று (அமலாக்கம்) விதிகள், 2002-ம் இயற்றப்பட்டது.  அடமானப்பொருளில் வங்கிக்கு உள்ள உரிமையை நிலைநாட்டுவதோடு அவற்றைத் தொடர்ந்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை ஏலம் விடுதல் போன்றவை குறித்த நடைமுறைகள் தெளிவாக இவற்றில் விளக்கப்பட்டுள்ளன.   ஆதலால் நீதிமன்றத்தின் தலையீடின்றி குறிப்பிட்ட தொடர்புடைய சட்டங்களில் சொல்லப்பட்டுள்ள தீர்வுகளையே வங்கிகள் நாடுவது விரும்பத்தக்கதாகும். 

(xiii)  கடனாளியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது அடமானப் பொருளை கையகப்படுத்திக்கொள்ள தனியான விதிமுறைகள் குறித்த ஷரத்து எவையேனும் ஒப்பந்தத்திலேயே பதிவு செய்திருந்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மேற்கொள்ளுவதற்கு முன் அந்த ஷரத்து சட்டபூர்வமாகச் செல்லுபடியாகக் கூடியதான ஒன்று மற்றும் எழுத்திலும் கருத்திலும் இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் கருத்துக்களோடு அது இயபுடையதென்றும் வங்கி உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.  இவற்றோடு கூடவே ஒப்பந்தம் செய்துகொள்ளும் நேரத்திலேயே இத்தகைய அடமானப் பொருளை கையகப்படுத்தும் விதிமுறைகள் குறித்த ஷரத்துக்கள் அதில் இடம்பெற்றுள்ளது என்பதை தெளிவாக கடனாளிக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  ஒப்பந்தத்தின் சட்டதிட்டங்கள் வங்கியின் வசூல் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.  அவற்றில் பின்வரும் விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். (a) பொருட்களைக் கைக்கொள்ளும்போது முன்னறிவிப்புக்குத் தேவையான காலக்கெடு (b)  எந்தெந்த சூழ்நிலைகளில் இந்தக் காலக்கெடுவை அனுசரிக்கத் தேவையில்லை (c)அடமானப் பொருளை கையகப்படுத்தும் செயல்முறை (d) அடமானச் சொத்தினை விற்பதற்கு / ஏலத்தில் விடுவதற்கு முன்பு இறுதியாக கடனை திருப்பிக் கட்ட கடனாளிக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதற்கு உரிய ஷரத்து (e) கையகப்படுத்திய அடமானப்பொருளை மீண்டும் கடனாளியிடமே திருப்பித்தருவதற்கு பின்பற்றவேண்டிய செயல்முறை (f) அடமானப் பொருளின் ஏலம் / விற்பனை குறித்த செயல்முறை  

மக்கள் குறைதீர் மன்றங்களின் பயன்பாடு

(xiv)     ரூ.10 லட்சத்திற்கும் குறைவான கடன்கள், தனிநபர் கடன்கள், கடன் அட்டை கடன்கள், வீட்டுவசதி கடன்கள், குறித்த வழக்குகள் மக்கள் குறைதீர் மன்றத்திடம் அனுப்பப்படலாம் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து 3 ஆகஸ்ட் 2004 தேதியிட்ட எண் DBOD.Leg.No.BC.21/09.06.002/ 2004-05 உள்ள சுற்றறிக்கையை பார்க்குமாறு வங்கிகளை வேண்டுகிறோம்.  இதன்படி கடன்களை வசூலிக்க சிவில் நீதிமன்றங்கள் ஏற்படுத்தியுள்ள மக்கள் குறைதீர் மன்றங்களை வங்கிகள் அணுகலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.  உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளபடி, ரூ.10 லட்சத்திற்கும் குறைவான கடன்கள், தனிநபர் கடன்கள், கடன் அட்டை கடன்கள், வீட்டுவசதி கடன்கள், குறித்த வசூல் வழக்குகளுக்கு மக்கள் குறைதீர் மன்றத்தை பயன்படுத்திக்கொள்ள வங்கிகளை ஊக்குவிக்கிறோம். 

கடன் ஆலோசகர்களை பயன்படுத்துதல்

(xv)      சில கடனாளிகள் பரிதாபத்திற்குரியவர்களாக கருணையுடன் அவர்களை அணுகவேண்டிய கட்டாயம் வங்கிக்கு இருக்குமானால் அவர்களுக்கு தக்கவிதத்தில் ஆலோசனை வழங்க கடன் ஆலோசகர்களின் சேவைகளை வங்கி குறிப்பாக பயன்படுத்தலாம்.  வங்கிகள் இதற்கான ஒரு செயல்முறை திட்டத்தினை அமைத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். 

வங்கிகள் / அவற்றின் வசூல்முகவர்களுக்கு எதிரான புகார்கள்

3.         முதன்மையானவர் என்கின்ற முறையில் வங்கிகள் தாங்கள் நியமித்த முகவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்கவேண்டியவர்கள் ஆவார்கள்.  ஆகவே கடன் வசூலில் ஈடுபடும் தமது முகவர்கள் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள், (BCSBI-ன் நெறிமுறை உட்பட) ஆகியவற்றை கடன் வசூல் செயல்முறையில் கடைப்பிடிப்பதை வங்கிகள் உறுதிசெய்திடவேண்டும்.

4.         மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் கண்டனத்துக்குரிய வழிமுறைகளை வங்கியின் வசூல் முகவர்கள் பின்பற்றுவது குறித்து ரிசர்வ் வங்கிக்கு வரும் புகார்கள் கடுமையானதாகக் கருதப்படும்.  ரிசர்வ் வங்கி அது சமயம் சில குறிப்பிட்ட இடங்களில், நீதி சார்ந்த அல்லது செயல்பாட்டு விஷயங்களில் வசூல் முகவர்களை அந்த வங்கி பணியமர்த்துவதையே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தடைசெய்யக்கூடும்.  இத்தகு நெறிமுறைப் பிறழல்கள் தொடர்ந்திடுமானால் இந்தத் தடையின் இடம் அல்லது காலத்தை ரிசர்வ் வங்கி நீட்டிக்கக்கூடும்.  ஒரு வங்கியின் கடன் வசூல் குறித்த கொள்கை, நடைமுறைப் பழக்கம் அல்லது செயல்முறை குறித்து உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதி மன்றம் சில சட்டதிட்ட உத்தரவுகளை பிறப்பித்தாலோ அலலது ஒரு வங்கி அல்லது அதன் இயக்குநர் / அலுவலர் / முகவர் மீது ஏதாவது தண்டனைக் கட்டணம் விதித்தாலோ மேற்குறிப்பிட்டவகையிலான கண்காணிப்பு நடவடிக்கை அந்த வங்கியின் மீது எடுக்கப்படும்.

5.         கடன் வசூல் செயல்முறையில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வங்கியின் பணியாளர்களும் நடைமுறையில் பின்பற்றுவதை வங்கிகள் உறுதி செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காலமுறை மறுஆய்வு

6.         வசூல் முகவர்களைப் பணியமர்த்திடும் வங்கிகள் தங்களின் செயல்முறையினை காலமுறைதோறும் மறு ஆய்வு செய்திடல் வேண்டும்.  தங்களின் அனுபவத்தில் சிலவற்றைக் கற்று, சில மேம்பாடுகளைச் செய்து, ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு இவற்றை கொண்டுவந்து, வழிகாட்டுதல்களை மேம்படுத்த இவ்வகையில் சில ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். 

தங்கள் உண்மையுள்ள

(பிரசாந்த் சரன்)
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)


2007-08-ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கொள்கை அறிவிப்பின் மீது
இடைக்கால சீராய்வின் பத்தி 172 மற்றும் 173ன் பகுதிகள்

வங்கிகள் பணியமர்த்தும் வசூல் முகவர்கள்

172.    சமீபகாலமாக வங்கிகள் வசூல் முகவர்களை பணியமர்த்தியது தொடர்பாக ஏராளமான சச்சரவுகள் மற்றும் வழக்குகள் வங்கிகளுக்கு எதிராக எழுந்தன.  இது குறித்த தவறான பிரச்சாரங்கள் வங்கித்துறை மொத்தத்தின் நற்பெயரை பாதிக்கக்கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது.  ஆகவே வங்கிகள் வசூல் முகவர்களை பணி நியமனம் செய்யும்பொழுது மேற்கொள்ளவேண்டிய கொள்கை, பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை திருத்தி அமைக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.  எனவே வசூல் முகவர்களை பணியமர்த்தும்போது வங்கி குறிப்பிடப்படும் சில முக்கியமான விஷயங்களை கருத்தில் கொண்டு செயல்படுமாறு வங்கிகள் வலியுறுத்தப்படுகின்றன.

173.    வங்கிகளின் வசூல் முகவர்கள் கண்டனத்திற்குரிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறித்து ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வருகின்றன.  வங்கியின் கண்காணிப்பாளராக இத்தகு புகார்களுக்கு வங்கிகள் இடமளிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.  வசூல் முகவர்கள் கண்டனத்திற்குரிய பழக்கவழக்கங்களை பின்பற்றியதால் அவர்களை பணிநியமனம் செய்த வங்கிகள் மீது உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதி மன்றம் சில சட்டதிட்ட உத்தரவுகளை பிறப்பித்தாலோ அலலது ஒரு வங்கி அல்லது அதன் இயக்குநர் / அலுவலர் மீது ஏதாவது தண்டனைக் கட்டணம் விதித்தாலோ அத்தகு வங்கிகள் வசூல் முகவர்களை பணியமர்த்துவதற்கு தற்காலிகமாக (கண்டனத்திற்குரிய பழக்கவழக்கங்கள் தொடர்ந்திட்டால் நிரந்தரமான) ரிசர்வ் வங்கி தடை விதிக்கும்.  நவம்பர் 15, 2007ற்குள் இது குறித்த நடைமுறைக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்.
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்