RBI/2016-17/99
IDMD.CDD.No.894/14.04.050/2016-17
அக்டோபர் 20, 2016
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
குறிப்பிடப்பட்ட அஞ்சலகங்கள்
ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிட்.
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஆஃப் இந்தியா லிட்.
மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்
அன்புடையீர்
தங்க பத்திரங்கள் 2016-17 வரிசை III - செயல்முறை வழிகாட்டுதல்கள்
தங்கப்பத்திரங்கள் தொடர்பான இந்திய அரசின் அறிவிப்பு எண் F. No. 4(16)-W&M/2016 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை IDMD. CDD. No. 893/14.04.050/2016-17 அக்டோபர் 20, 2016-ஐப் பார்க்கவும். இது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அவற்றின் பதில்கள் www.rbi.org.in என்ற எங்கள் இணையதளத்தில் உள்ளன. இத்திட்டம் குறித்த செயல்முறைக்கான வழிகாட்டுதல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
1. விண்ணப்பம்
வங்கிக் கிளைகளில் குறிப்பிட்ட அலுவலகங்களில் முதலீட்டாளர்களின் விண்ணப்பங்கள் வேலை நேரத்தில் அக்டோபர் 24, 2016 முதல் நவம்பர் 02, 2016 வரை அளிக்கப்படலாம். விண்ணப்பம் எல்லாவகையிலும் முழுமையாக உள்ளது என்பதை அவற்றைப் பெறும் அலுவலகங்கள் உறுதி செய்திடவேண்டும். ஏனெனில், முழுமையாக இல்லாத விண்ணப்பங்கள் மறுக்கப்படலாம். எப்போது கூடுதலாக விவரங்கள் தேவைப்படுகிறதோ அவற்றை விண்ணப்பதாரர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். சிறந்த வாடிக்கையாளர் சேவையை அளிக்கும்பொருட்டு, வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிப்பதற்கு ஏற்ற வகையில் வசதிகளை வங்கிகள் செய்துதரலாம்.
2. கூட்டாக முதலீடு மற்றும் நியமனம்
பல்வேறு விதமாக இணைந்து தனிநபர்கள் முதலீடு செய்யலாம். முதல் பெயரிட்ட முதலீட்டாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமிக்கலாம். நடப்பிலுள்ள வழக்கத்தைப் பின்பற்றி தேவைப்படுகின்ற விவரங்களை விண்ணப்பதாரரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
3. உங்கள் வாடிக்கையாளரை அறிவீர் (KYC) – நிபந்தனைகள்
தங்கத்தை நேரிடையாக வாங்கும்பொழுது பின்பற்றப்படும் உங்கள் வாடிக்கையாளரை அறிவீர் (KYC) – நிபந்தனைகள் தங்கப்பத்திரங்களுக்கும் பொருந்தும். கடவுச் சீட்டு, வருமானவரிக் கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை போன்ற சான்றாவணங்கள் தேவைப்படலாம். வயதுக்கு வராத தனி நபர்களைப் பொருத்தவரை, வங்கிக் கணக்கின் எண்ணும் மதிப்புடைய சான்றாவணமாக இவ்விஷயத்தில் கருதப்படும். பத்திரங்களை வெளியிடும் வங்கிகள் / ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிட். / குறிப்பிடப்பட்ட அஞ்சலகங்கள் / முகவர்கள் ஆகியோர் KYC நடைமுறைகளை அனுசரிப்பர்.
4. விண்ணப்ப பணத்தின் மீது வட்டி
விண்ணப்பதாரர் பணம் செலுத்திய (வங்கியில் அது வரவு வைக்கப்படும் நாளிலிருந்து) நாளிலிருந்து பத்திரம் வெளியிடப்படும் தீர்வு நாள் வரை (விண்ணப்பதாரரிடமிருந்து பணம் எடுக்கப்பட்ட காலம்) நடப்பிலிருக்கும் கணக்கின் மீதான வட்டி விகிதத்தில் வட்டி அளிக்கப்படும். விண்ணப்பதாரரின் கணக்கு, விண்ணப்பத்தைப் பெறும் வங்கியின் வசம் இல்லாதபட்சத்தில், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு மின்னணு நிதிமாற்றம் மூலமாக வட்டித் தொகை வரவு வைக்கப்படும்.
5. ரத்து செய்தல்
பத்திரவெளியீடு முடியும் நாள் (நவம்பர் 02, 2016) வரை முதலீட்டு விண்ணப்பத்தை ரத்து செய்ய அனுமதி உண்டு. பகுதி அளவிற்கு விண்ணப்பத்தை ரத்து செய்யமுடியாது. விண்ணப்பம் ரத்தானால், விண்ணப்ப பணத்தின் மீதான வட்டி வழங்கப்படாது.
6. அடமானப் பதிவு
தங்கப்பத்திரங்கள் இந்திய அரசின் பத்திரங்கள். ஆகவே, பத்திரங்களின் அடமானப் பதிவுகள் அரசுப் பத்திரங்கள் சட்டம் 2006-ன்படி நடப்பிலுள்ள சட்ட வழிமுறைகளை ஒட்டியே அமைந்திடும்.
7. முகவர்களின் ஏற்பாடு
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், “வங்கிசாரா நிதி நிறுவனங்கள்“ (NBFCs), ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர்கள், தேசிய சேமிப்புப் பத்திர முகவர்கள் (NSC) ஆகியோரை, தங்கப்பத்திர விண்ணப்பங்களைப் பெற்றுத் தர முகவர்களாக ஏற்பாடு செய்துகொள்ளலாம். வங்கிகள் தமக்கேற்ப இவர்களுடன் உடனபடிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பெறப்பட்ட மொத்தத் தொகையில் 100 ரூபாய்க்கு ஒரு ரூபாய் வீதம் பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு தரகுத்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவிகிதம் தரகுத் தொகையாக, முகவர்களுக்குப் (அவர்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு) பத்திரம் வெளியிடும் நிறுவனங்கள் வழங்கலாம்.
8. இந்திய ரிசர்வ் வங்கியில் e-குபேர் முறையில் செயலாக்கம்
இந்திய ரிசர்வ் வங்கியில் e-குபேர் முறையில் தங்கப் பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட வணிவங்கிகள் மற்றும் குறிபிபடப்பட்ட அஞ்சலகங்களில் பொதுமக்கள் முதலீட்டிற்காக கிடைக்க வகை செய்யப்படும். நிதி சார்ந்த நெட்வொர்க் மூலமாக (Infinity or Internet) இதை முதலீட்டாளர்கள் அணுகலாம். விண்ணப்பத்தைப் பெறும் அலுவலகங்கள் தங்கள் தகவல்களை அதில் பதிவு செய்யலாம் அல்லது மொத்தமாக தளத்தில் ஏற்றலாம். விண்ணப்பங்கள் தளத்தில் கிடைத்ததும், உடனே இதற்கான உறுதி ஒப்புகை கிடைத்திடும். அதன் விவரச் சீட்டும் அனுப்பப்படும். இதை வைத்து விண்ணப்பத்தைப் பெற்ற அலுவலகங்கள் தங்களின் தகவல் பேழையை சரிசெய்து கொள்ளலாம். ஒதுக்கீட்டு நாளான நவம்பர் 17, 2016-ல் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் “வைப்புரிமைச் சான்றிதழ்”கள் கணினி வழி தயாரிக்கப்படும். விண்ணப்பத்தைப் பெற்ற அலுவலகங்கள் அவற்றைத் தளவிரக்கம் செய்து, அச்சிட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்கலாம். மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டால், அவை மூலமாகவும் இவை விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படலாம். விண்ணப்பதாரரின் டிமேட் கணக்கு (காகித வடிவிலில்லா பத்திரக்கணக்கு) விபரம் கொடுக்கப்பட்டால், ஒதுக்கீட்டு நாளில் அந்தக் கணக்கில் பத்திர தொகை வரவு வைக்கப்படும்.
9. வைப்புரிமைச் சான்றிதழ்
100 GSM தாளில் A4 அளவில் வண்ணம் கலந்தபடி வைப்புரிமைச் சான்றிதழ் அச்சிட்டு அளிக்கப்படவேண்டும்.
10. பராமரிப்பு மற்றும் பின்தகவல்
விண்ணப்பங்களைப் பெற்ற அலுவலகங்கள் (பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் குறிப்பிடப்பட்ட அஞ்சலகங்கள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிட்., நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஆஃப் இந்தியா லிட்., மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்) விண்ணப்பதாரர்களை தங்களின் வாடிக்கையாளர்களாகக் கருதி பத்திரங்கள் தொடர்பாகத் தேவையான சேவைகளை செய்திடவேண்டும். அவ்வப்போது அவர்கள் அளிக்கும் விவரங்கள் புதுப்பிக்கப்படவேண்டும். முதிர்வுக்கு முன்னதாக பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பித்தால் அந்த தகவல்களும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அலுவலகங்கள் தாங்கள் பெற்ற விண்ணப்பங்களை முதிர்வுகாலம்/ திருப்பித்தரப்படும் காலம் வரை பாதுகாத்து வைத்திடவேண்டும்.
11. வர்த்தக வசதி
இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கும் தேதியிலிருந்து இந்தப் பத்திரங்களில் வர்த்தகம் செய்யும் வசதியுண்டு. (காகித வடிவிலில்லா கணக்கில் – Demat பத்திரங்களை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இந்தப் பத்திர வர்த்தகத்தில் ஈடுபடமுடியும்.)
12. தொடர்புகொள்ள விவரங்கள்
ஏதேனும் கேள்விகள் / விளக்கங்கள் தேவைப்பட்டால் பின்வரும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
-
தங்கப் பத்திரம் – e.mail
-
வருமானவரி தொடர்பாக – e.mail
இங்ஙனம்
(ராஜேந்திர குமார்)
பொதுமேலாளர் |