Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (277.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/11/2016
நடப்பிலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 வங்கி நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன

RBI/2016-17/112
DCM (Plg) No.1226/10.27.00/2016-17

நவம்பர் 08, 2016

தலைவர் / மேலாண்மை இயக்குநர் /
தலைமை செயல் அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
அயல்நாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /

அன்புடையீர்

நடப்பிலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 வங்கி நோட்டுகள் சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன

இந்திய அரசு, அரசிதழ் அரிவிக்கை எண் 2652 (நவம்பர் 08, 2016 தேதியிட்டதன்) மூலம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முன்னர் புழக்கத்திலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் நவம்பர் 09, 2016 முதல் (அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள வகையில்) சட்டப்படி செல்லுபடியாகாது என்று அறிவித்தது. நம் நாட்டின் கலாசார பாரம்பரியம் மற்றும் விஞ்ஞான சாதனைகளை உயர்த்திக் காட்டும் வகையில் புதிய வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் அளவில் மகாத்மா காந்தி புதிய வரிசை நோட்டுகள் வெளியிடப்பட உள்ளன.. செல்லுபடியாகாத இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது செல்லும்படியாகும் இதர மதிப்பிலக்க நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவோ பொதுமக்கள் நாடும் முதன்மை முகமைகளாக வங்கிகள் விளங்கும். பொதுமக்கள் இத்தகைய பரிவர்த்தனைகளை டிசம்பர் 30, 2016 அன்றும் அதற்கு முன்பாகவும் மேற்கொள்ளலாம். ஆகவே, வங்கிகள் இந்தப் பணிக்கு மிக அதிகமான முக்கியத்துவத்தை அளிக்கவேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வசமுள்ள ரூ. 500 மற்றும் ரூய1000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஏதுவாக வங்கிகள் பின்வரும் ஏற்பாடுகளைச் செய்திடவேண்டும்.

2. நவம்பர் 09, 2016 அன்று எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

  1. அனைத்து வங்கிகளுக்கும் நவம்பர் 09, 2016 வர்த்தகமில்லாத வேலைநாளாக இருக்கும். ஆயினும் வங்கிக்கிளைகள் அரசின் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உரிய பணிகளை இந்த சுற்றறிக்கையின்படி செய்திடவேண்டும்.

  2. ATM-கள் பணம்வழங்கிகள், சுழற்சி எந்திரங்கள், நாணயம் அளிக்கும் எந்திரங்கள் அல்லது ஏதாவது ஒரு வகையில் பணம் கொடுக்கும் எந்திரங்கள் CIT குழுமங்கள், வங்கி வர்த்தக ஏற்பாட்டாளர்கள் ஆகியவைகள்/ ஆகியவர்களிடமுள்ள மேற்குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை மீட்டுப் பெறவேண்டும். வெள்ளைவில்லை ATM-களின் ஆதரவு வங்கியாளர்கள், இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளை இந்த ATM-களில் இருந்து மீட்டுப் பெறுவதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

  3. நவம்பர் 09, 2016 முதல் வங்கிக் கிளைகள், வர்த்தக ஏற்பாட்டாளர்கள் மூலம் குறிப்பிட்ட மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  4. பணத்தை கொடுத்தல் / ஏற்றல் முதலியனவற்றைச் செய்யும் அனைத்து ATM-கள், பணம் ஏற்கும் எந்திரங்கள் பணச்சுழற்சி எந்திரங்கள் ஆகியவை நவம்பர் 09 மற்றும் நவம்பர் 10, 2016 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும்.

  5. அனைத்து ATM-கள், பணம் வழங்கிகளின் கணிப்புக்கூறுகள் மாற்றப்பட்டு, நவம்பர் 11, 2016 முதல் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கப்படுவதோடு, அவற்றின் மூலம் ரூ. 100 & 50 மதிப்பிலக்க நோட்டுகள் வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும். ஆயினும் வங்கிகள் புதிய காந்தி வரிசை நோட்டுகளை எந்திரங்கள் மூலம் வழங்குவதற்கு வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் அறவுறுத்தல்களுக்காக காத்திருக்க வேண்டும். எனினும் நவம்பர் 09, 2016 முதல் அவை முகப்புகளில் வழங்கப்படலாம்.

  6. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ல் கூறியபடி உள்ள ஒவ்வொரு வங்கிக்குழுமம் மற்றும் ஒவ்வொரு கருவூலம் பின்னிணைப்பு-1ல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் நவம்பர் 08, 2016 அன்று வேலை நேர முடிவில் வைத்திருந்த குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள் பற்றிய விவரங்களை நவம்பர் 10, 2016, 1 மணிக்குள் அந்த வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் ஆட்சிப்பரப்பெல்லைக்குரிய இந்திய ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். அந்த படிவத்தில் கையிருப்பிலுள்ள பணத்தைத் தவிரவும், ATM-கள் பண வழங்கிகள் இதர எந்திரங்களிலிருந்து நாணயம் வழங்கும் எந்திரங்கள், CIT குழுமங்கள், வர்த்தக ஏற்பாட்டாளர்கள் ஆகியோரிடமிருந்து மீட்டுப்பெற்ற குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகளின் விவரங்களும் தெரிவிக்கப்படவேண்டும்.

  7. இவ்வாறு வங்கிகள் வசமுள்ள குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் தொடர்புடைய பணக்கருவூலக்கிளை / இந்திய ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்யப்பட்டு, அந்தந்த வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

  8. வங்கிகள் தத்தம் பணத் தேவைகளை மதிப்பீடு செய்து, இதர செல்லுபடியாகும் மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை அருகிலுள்ள கருவூலக்கிளை / இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

  9. டிசம்பர் 30, 2016 வரை பணம் ஏற்கும் எந்திரங்கள் மேற்குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகளைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  10. மேற்குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகள் செல்லுபடியாகாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து (பின்னிணைப்பு-2) அளித்திட்ட விவரங்கள், புதியதாக வெளியிடப்படவிருக்கும் மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளின் முக்கிய அம்சங்கள் போன்ற தகவல்கள் அச்சிடப்பட்டு, நகலெடுக்கப்பட்டு போதுமான அளவு பொதுமக்களுக்கு அறிவூட்டும் வண்ணம் வழங்கப்படவேண்டும். அவை வங்கி வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படலாம். ATM மையங்களிலும் வைக்கப்படலாம்.

  11. வங்கிகள், நோட்டுகள் மாற்றும் முகப்புகளில் பணிபுரியத் தக்க பணியாளர்களைத் தேர்நேதெடுத்து அவர்களுக்குச் சுருக்கமாக இத்திட்டம் பற்றியும், பின்பற்றவேண்டிய செயல்முறைபற்றியும் தெரிவிக்க வேண்டும்., நோட்டு மாற்றும் முகப்புகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பின்னிணைப்பு-4ல் காணப்படும் இதுகுறித்த “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்“ நகல் அளிக்கப்படலாம்.

  12. வங்கிகள் போதிய அளவு நோட்டுகளை எண்ணும் எந்திரங்கள், அல்ட்ரா வயலட் விளக்குகள், நோட்டுகளைப்பிரிக்கும் எந்திரங்கள் ஆகியவற்றை முகப்புகளில் கூடுதலான வேலைப் பளுவை சமாளிக்கும் வண்ணம் வழங்கி, நேரத்தே கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும். சுற்றறிக்கை எண் DCM (FNVD) No. 1134/16.01.05/2016-17, அக்டோபர் 27, 2016 தேதியிட்டதில் அறிவுறுத்தியுள்ளபடி, வங்கி வளாகம், முகப்புகள் உள்ள பகுதிகளில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டு அவற்றின் பதிவுகள் பாதுகாக்கப்படவேண்டும்.

3. நவம்பர் 10, 2016 அன்று எடுக்கவேண்டிய நடவடிக்கை

(a) வங்கிகள் சாதாரண வேலை நாட்களைப் போல், நவம்பர் 10, 2016 அன்று இயங்கத் தொடங்கும்.

(b) வங்கிகள் குறிப்பிட்ட நோட்டுகளை மாற்றுகின்ற வசதியை செய்து தரும் பணிக்கு மிக அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். கூடுதலான முகப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடுதல் நேரமும் பணிபுரியத் தயாராக இருக்கவேண்டும். பெருமளவு வங்கிப் பணியாளர்கள் இந்த வேலைக்கு ஒதுக்கப்படவேண்டும். கூடுதல் வேலை பளுவைச் சமாளிக்க ஓய்வுபெற்ற பணியாளர்களைக்கூட தற்காலிகமாகப் பணியமர்த்திக்கொள்ளலாம்.

(c) நோட்டுகளை மாற்றும் வசதி

வங்கிகள், அரசுக் கருவூலங்கள் தவிர [பாரா (1) உப-பாரா (1)ல் கூறப்பட்டுள்ளபடி] இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளை வைத்திருக்கும் ஒரு நபர் அவற்றை கீழே குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்திய ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கி, தனியார், அயல்நாட்டு வங்கி, பிராந்திய கிராமப்புற வங்கி, நகரக் கூட்டுறவு வங்கி, மாநில கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் ஏதாவது ஒரு கிளையில் டிசம்பர் 30, 2016 (அன்றும்) வரையிலும் மாற்றிக்கொள்ளலாம்.

  1. மொத்தம் ரூ. 4000 மதிப்பு வரையுள்ள குறிப்பிட்ட நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கியால் வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், அடையாளச் சான்றாவணத்துடன், வங்கிகளில் கொடுத்து செல்லுபடியாகும் எந்தவொரு மதிப்பிலக்க நோட்டுகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். குறிப்பிட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான உச்சவரம்பு ரூ. 4000 என்பது இந்த அறிக்கை வெளியான நாள்தொடங்கி 15 நாட்களுக்குப்பின் மறுபரிசீலனை செய்யப்பட்டு உரிய ஆணைகள் தேவைப்படும் இடங்களில் வெளியிடப்படும்.

  2. குறிப்பிட்ட நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திட உச்சவரம்பு ஏதுமில்லை. ஆயினும், நடப்பிலுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிவீர் (KYC) நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படாத வங்கிக் கணக்குகளில் அதிகபட்சமாக ரூ. 50,000/- வரை டெபாசிட் செய்யலாம்.

  3. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர் செலுத்தும் இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளின் மதிப்பு, உரிய வங்கிநடைமுறையைப் பின்பற்றி, அடையாளச் சான்றாவணம் காட்டப்பட்டபின், அவரின் கணக்கில் வரவுவைக்கப்படும்.

  4. மூன்றாம் நபருக்காக (அடுத்தவர்) குறிப்பிட்ட நோட்டுகளை அந்த நபரின் கணக்கில் வரவுவைக்க செலுத்த வேண்டுமானால், அதன் பொருட்டு, செலுத்தும் நபருக்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். செலுத்துபவர் தனது அடையாளச் சான்றாவணத்தைக் (பின்னிணைப்பு-5ல் உள்ளபடி) காண்பிக்க வேண்டும். அதன் பின், செலுத்தப்பட்ட நோட்டுகளின் மதிப்பு மூன்றாம் நபருடைய கணக்கில் வரவுவைக்கப்படும்.

  5. நவம்பர் 24, 2016 (வேலை நேரம் முடியும் வரை) ஒரு நாளைக்கு ரூ. 10,000 வரையிலும், ஒட்டு மொத்தமாக ஒரு வாரத்திற்கு (அறிவிப்பு தொடங்கிய நாள் முதல்) ரூ. 20,000 வரை மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து ஒருவர் வங்கி முகப்பில் எடுக்கமுடியும். இந்த வரம்புகள் பின்னர் மறு பரிசீலனை செய்யப்படும்.

  6. இவ்வாறு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை எந்தவிதத் தடையுமின்றி, ரொக்கம் தேவையில்லாத வகையில் காசோலை வழங்கவோ, மின்னணு நிதிமாற்றம் (உ-ம். NEFT, RTGS, IMPS, மொபைல் பேங்கிங், இணையதள வங்கிப் பணமாற்றம்) செய்யவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

  7. அனைத்து தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ATMs) மூலம் நவம்பர் 18, 2016 வரை, ஒரு நாளைக்கு ஒரு அட்டைக்கு ரூ. 2,000 வரை பணம் வழங்கப்படும். அது பின்னர் நவம்பர் 19, 2016 முதல் வரம்புத் தொகை ரூ. 4,000 ஆக உயர்த்தப்படும்.

  8. டிசம்பர் 30, 2016-அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, இவ்வாறு இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவோ அல்லது பணமாக மாற்றிக் கொள்ளவோ ஒருவரால் முடியாது போனால், இந்திய ரிசர்வ் வங்கியால் பின்னர் அறிவிக்கப்படும் தேதிவரை, இந்திய ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட அலுவலகங்களில் இதற்கான வசதி செய்து தரப்படும் அல்லது ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.

  9. வங்கிக் கிளைகளைப் போலவே வர்த்தக ஏற்பாட்டாளர்கள் இந்தக் குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகளை மாற்றி மற்ற நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு அடையாளச் சான்றாவணம் மற்றும் விண்ணப்பம் அளிக்கப்படும்பட்சத்தில் ரூ. 4000 வரை வழங்க அனுமதி அளிக்கப்படலாம். இதற்கு ஏதுவாக, வங்கிகள் தங்கள் விருப்பத்தின்பேரில் வர்த்தக ஏற்பாட்டாளர்கள் தத்தம் கைவசம் வைக்கக் கூடிய ரொக்க இருப்பு வரம்புகளை டிசம்பர் 30, 2016 வரை உயர்த்தலாம்.

  10. ஜன்தன் யோஜனாக் கணக்குகளைப் பொருத்தவரை இந்தக் குறிப்பிட்ட மதிப்பிலக்க நோட்டுகளை வரவு வைக்கும்போது நடப்பிலிருக்கும் வரம்பு எல்லைகள் பொருந்தும்.

4. அறிக்கை அளிக்கும் முறைகள்

வங்கிக் கிளை ஒவ்வொன்றும், நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரை (அல்லது இந்திய ரிசர்வ் வங்கியால் பின்னர் அறிவிக்கப்படும் தேதி வரை) ஒவ்வொரு நாளின் வேலை நேரமுடிவில் அது மாற்றித்தந்த குறிப்பிட்ட நோட்டுகளைப் (ரூ.500, ரூ.1000) பற்றிய அறிக்கையை ரிசர்வ் வங்கி வடிவமைக்கும் படிவத்தில், மின்னஞ்சல் அல்லது நகலனுப்பி மூலம் அந்தந்த வங்கியின் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு பின்னிணைப்பு 6-ல் உள்ளபடி அனுப்பிட வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் இவற்றை ஒருங்கிணைத்து பின்னிணைப்பு 6A-ல் உள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கியின் பண மேலாண்மைத் துறை, மைய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தினமும் அனுப்பவேண்டும்.

5. வங்கிகள் தத்தம் கிளைகளுக்கு இத்திட்டத்தின் அம்சங்கள், வழிகாட்டுதல்களை கவனித்து உன்னிப்பாக பின்பற்றுமாறு விரிவான அறிவுறுத்தல்களை அனுப்பிடவேண்டும். வங்கிக் கிளைகளிலுள்ள பணியாளர்கள் குறிப்பாக முகப்புகளில் பணியாற்றுவோர் இது குறித்து தெளிந்த அறிவு பெறுதல் அவசியம். இதுகுறித்த விவரங்களை நமது இணையதளமான www.rbi.org.in மற்றும் அரசு நிதி அமைச்சகத்தின் இணையதளத்தையும் அணுகி அறிந்து பயன்பெறலாம் பணியாளர்கள் பின்னிணைப்பு 4-ல் கொடுக்கப்பட்டுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – பதில்கள் பகுதியை நன்றாகப் படித்து லகுவாக செயல்பட தேர்ச்சி பெறவேண்டும்.

6. பின்னிணைப்பு-2, 3 மற்று 4-ல் உள்ள தகவல்களின் பிரதிகள் எடுத்து பொதுமக்களுக்கு அவற்றை விநியோகிக்கவேண்டும்.

7. வங்கி வர்த்தக ஏற்பாட்டாளர்கள் சுவிட்ச் செயல்பாட்டாளர்கள், CIT குழுமங்கள் ஆகியோருக்கு இத்திட்டத்திற்கு தொடர்புடைய வகையில் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

8. வங்கிகள் இத்திட்டத்தின் அலமாக்கத்தைத் தினசரி அடிப்படையில் ஒரு மையக் கண்காணிப்பு அமைப்பின் மூலம் கண்காணிக்கவேண்டும். அதன் தலைவராக விளங்கும் தொடர்பு அதிகாரி பொதுமேலாளர் நிலைக்கும் கீழே இல்லாத அதிகாரியாக இருக்கவேண்டும். அந்தத் தொடர்பு அதிகாரியின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் உரிய இந்திய ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்திற்கு (அதன் ஒரு நகல் இந்திய ரிசர்வ் வங்கி மைய அலுவலகத்திற்கும்) மின்னஞ்சல் மூலமாக பின்வரும் வகையில் அனுப்பப்படவேண்டும்.

9. இந்திய ரிசர்வ் வங்கி அதன் மைய அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதன் மூலம் இத்திட்டத்தின் செயல்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றை கண்காணிப்பதோடு, வங்கிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி பின்வருமாறு.

E.mail:
Telephone: 022 22602804
022-22602944

10. பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அனுப்புக.

இங்ஙனம்

(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு – மேலே கூறியுள்ளபடி

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்