Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 30/09/2011

இந்தோ – நேபாளம் – பண அனுப்பீடு வசதி திட்டம்

இந்தோ – நேபாளம் – பண அனுப்பீடு வசதி திட்டம்

1. இந்தோ-நேபாளம் பண அனுப்பீடு வசதி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் யாவை ?

இது இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு எல்லை தாண்டி பண அனுப்ப உதவிடும் ஒரு வழிப்பாதை பண அனுப்பீடு வசதி திட்டமாகும்.  இது NEFT முறையின்கீழ் உள்ள திட்டம். இதற்கென பரிவர்த்தனை குறியீட்டு(Code) எண் 51 தரப்பட்டுள்ளது. ஒரு நபர் இத்திட்டத்தின் மூலம் இந்திய ரூபாய் 50,000/- வரை எந்த NEFT கிளையிலிருந்தும் பணமாற்றம் செய்ய முடியும்.  பயன் பெறுபவர் நேபாள ரூபாயில் அந்தப் பணத்தைப் பெறுவார். NEFT முறையில் உள்ள வங்கிக்கிளைகள் மற்றும் இதர தகவல்களை http://www.rbi.org.in/scripts/neft.aspx ல் பெறலாம்.

2. பணம் அனுப்பும் நபர் இந்தியாவில் கணக்கு வைத்திருக்கவேண்டியது அவசியமா ?

தேவையில்லை.  வங்கிக்கு வந்து போகும் நபர்கூட ரூபாய் 50,000 வரை பணம் கட்டி நேபாளத்திற்கு பயனாளிக்கு அனுப்ப இதில் வழிவகை உண்டு.

3. பயனாளி நேபாளத்தில் கணக்கு வைத்திருக்கவேண்டியது அவசியமா ?

இதுவும் தேவையில்லை. பயனாளிக்கு கணக்கு இருக்குமானால் அது நன்மை தரும்.  அந்தக் கணக்கில் அனுப்பப்படும் பணத்தை வரவு வைக்க முடியும்.  ஆனால் பயனாளி நேபாளத்தில் உள்நாட்டுப் பகுதியில் வங்கிக்கிளை வசதிகள் இல்லாத இடத்தில் வசிப்பவரானால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நேபாளக் கிளை(NSBL) ஒரு ஏற்பாட்டை  செய்துள்ளது.  அங்குள்ள பணமாற்ற முகவர் கம்பெனியோடு (பிரபு மணி டிரான்ஸ்பர் கம்பெனி என்று அழைக்கப்படும்) கூட்டுறவு கொண்டுள்ளது.  அதன்மூலம் வங்கிக் கணக்கு இல்லாதபோதிலும், அனுப்பப்பட்ட பணம் பயனாளிக்கு (நேபாள ரூபாயில்)வழங்கப்படும்.

4. பண அனுப்புபவர் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச ஆவணங்கள்/ அடையாளக்குறிப்புகள் எவை ?

பண அனுப்பும் நபர் வங்கிக்கணக்கு வைத்திருப்பராயின் வேறு தனியான ஆவணங்கள், அடையாளக் குறிப்புகள் தேவையில்லை.  அவ்வாறு இல்லாதபட்சத்தில், பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், தொலைபேசிக் கட்டண பில், வேலை செய்யும் இடத்தில் வழங்கப்படும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை அளிக்கலாம்.  KYC கோட்பாடுகளின்படி, இவற்றால் அளிக்கப்படும் தகவல்கள் பயன்படுத்தப்படும்.  நேபாளத்திலுள்ள பணம் பெறும் நபரின் முழு முகவரி, தொலைபேசி எண், அலைபேசி எண் ஆகிய தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.

5. இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு பணமாற்றம் எவ்வாறு நிகழ்கிறது ? ஒரு பரிவர்த்தனை முடிய எவ்வளவு காலமாகும் ?

இன்று இந்தியாவிலுள்ள NEFT வசதியுள்ள சுமார் 62000 வங்கிக்கிளைகள் மூலம் பணமாற்ற வசதி நேபாளத்திற்கு அளிக்கப்படுகிறது.  இந்த வங்கிக்கிளைகளின் பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியின் http://www.rbi.org.in/scripts இணையதளத்தில் உள்ளது. இந்தப் பரிவர்த்தனை பாரத ஸ்டேட் வங்கியின் குறிக்கப்பட்ட கிளைக்கு அனுப்பப்படும். அங்கே அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, நேபாளத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பப்படும். அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கிளை, பயனாளியின் வங்கிக் கணக்கை வரவு வைத்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணமாற்ற முகவர் மூலமாகவோ பணத்தை பயனாளிக்கு அளிக்கும்.

பயனாளி வங்கிக் கணக்கு குறித்த தகவல்கள் தெரிந்தால், நேபாளத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி அந்த கணக்கில் வரவு வைத்திட ஏற்பாடுகள் செய்யும்.  அவ்வாறு வங்கிக் கணக்கு இல்லாதபட்சத்தில், பணமாற்ற முகவர்(பிரபு மணி டிரான்ஸ்பர் கம்பெனி) கம்பெனியின் முகப்பில் தொடர்பு கொண்டு, UTR எண்ணை அனுப்பும் நபரிடமிருந்து பெற்று தெரிவிக்க வேண்டும். UTR எண்ணைத் தெரிவிக்கும்போதே பணம் அனுப்பும் நபர் குறித்த தகவல்களையும் பயனாளி தெரிவிக்க வேண்டும். அதோடு கூடவே தனது அடையாளக் குறிப்புக்கான ஆவணங்கள் (புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வாக்காளர் அல்லது குடியுரிமைச் சான்று) எதையேனும் அளிக்க வேண்டும்.

பயனாளி – பணமாற்ற முகவர் குழுமத்தை பணம் அனுப்பப்பட்ட ஒரு வாரத்திற்குள் அணுகவில்லை என்றால் அனுப்பிய நபருக்கே அதைத் திருப்பி அனுப்பிட பணமாற்ற முகவர் குழுமம் நடவடிக்கை எடுக்கும்.

6. பணம் அனுப்பும் நபர் நேபாளத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் மற்றும் பணமாற்ற முகவர் (பிரபு மணி டிரான்ஸ்பர் கம்பெனி) கம்பெனியின் விற்பனை நிலையங்கள் உள்ள இடங்களின் முகவரிகள் ஆகியவற்றை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

இந்தியாவில் NEFT வசதியுள்ள அனைத்துக் கிளைகளிலும் பண அனுப்பீடு செய்திட அளிக்கப்படும் செயல்முறைத் தாளில் இந்த விவரங்கள் அனைத்தும் இருக்கும். மேலும் இவை ரிசர்வ் வங்கியின் http://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/84489.pdf. என்ற இணைய தளத்திலும் கிடைக்கும்.

7. அனுப்பிய பணம் பயனாளியைச் சென்று சேராதபோது அனுப்பிய நபருக்கே எவ்வாறு திரும்பக்கிடைக்கும் ?

NEFT வசதி மூலம் பாரத ஸ்டேட் வங்கி நேபாளத்திலிருந்து திருப்பி அனுப்பப்படும் பணம், அனுப்பிய இந்தியவங்கிக் கிளைக்கு வந்துசேரும். பின்னர் அந்த வங்கி பணம் திரும்ப வந்துள்ள தகவலை அனுப்பியவருக்கு அளித்திடும். வங்கிக்கணக்கிலிருந்து பற்று வைத்து பணம் அனுப்பியிருந்தால், அனுப்பியவருக்கு கணக்கில் அத்தொகை வரவு வைக்கப்படும். வங்கிக்கு வந்துபோகும் வாடிக்கையாளர் பணமாக அதை வங்கியில் செலுத்தியிருந்தால்,  பணம் அனுப்பியதற்கான அத்தாட்சி/சான்று பண அனுப்பீடு விண்ணப்பத்தின் ஒப்புகைப் பகுதி காட்டப்பட்டால் பணம் திருப்பித் தரப்படும்.

8. பணம் அனுப்பிட கட்டணங்கள் ஏதுமுண்டா ?

புலம் பெயர்ந்திடும் உழைப்பாளர்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறுவதற்காக இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டதால், சலுகைக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டணம் கீழ்க்கண்டவாறு அளிக்க வேண்டும்.

a. பரிவர்த்தனையைத் தொடங்கும் வங்கி – ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5/- (அதிகபட்சம்)

b. இந்தியாவிலுள்ள SBI கிளை – பயனாளி நேபாளத்திலுள்ள SBIவங்கிக்கிளை(NSBL)யில் கணக்கு வைத்திருந்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20/-

c. இந்தியாவிலுள்ள SBI  இதை நேபாளத்திலுள்ள NSBLஉடன் பகிர்ந்துகொள்ளும் NSBL, பயனாளி கணக்கில் வரவுவைக்க தனியாக ஏதும் கட்டணம் விதிப்பதில்லை.

d. பயனாளி NSBLயில் கணக்கு வைத்திருக்கவில்லையென்றால் கூடுதல் கட்டணமாக ரூபாய் 5000/- வரை அனுப்ப ரூ.50/-ம், ரூ.5000/-க்குமேல் ரூ.75/- ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆகவே பரிவர்த்தனைக்காக  குறைந்தபட்ச கட்டணம் ரூ.25/-, அதிகபட்சம் ரூ.100/- அனுப்பிடும் பணத்தின் மதிப்பைப்பொறுத்து அமைந்திடும்.  பரிவர்த்தனை தொடங்கும் வங்கியே, மொத்த கட்டணத்தையும் (மேற்கூறிய) பணம்  அனுப்பும் நபரிடமிருந்து வசூலித்தும் தனது பங்கான ரூ.5ஐ தக்க வைத்துக்கொண்டு மீதிப்பணத்தை SBIக்கு அனுப்பிட வேண்டும். இவ்வாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

9. எத்தனை தடவைகள் பணமாற்றம் செய்யலாம்? ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா ?

ஒரு நபர் இத்திட்டத்தின்கீழ் ஒரு ஆண்டுக்கு 12 தடவைகள் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

10. இதுகுறித்த புகார்களுக்கு தீர்வு கிடைத்திட யாரை அணுகவேண்டும்?

பயனாளியின் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் அல்லது வேறுவிதமான புகார்கள் ஏதும் இருப்பின் அந்த வங்கியின் (தொடங்கும் வங்கி/SBI)யின் NEFTயில் வாடிக்கையாளர் வசதி மையத்தை அணுகலாம்.  அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் CFCயின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.   இந்திய ரிசர்வ் வங்கியின் http://www.rbi.org.in/scripts/neft.aspx  என்ற் இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது திருப்திகரமாக தீர்க்கப்படவில்லையென்றால், தேசிய தீர்வு மையம், இந்திய ரிசர்வ் வங்கி, மும்பையில் உள்ள NEFT உதவி மையம் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம் அல்லது மின் அஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்  அல்லது பொது மேலாளர்,  இந்திய ரிசர்வ் வங்கி, தேசிய தீர்வு மையம், முதல் மாடி, பிரீ பிரஸ் ஹவுஸ், நாரிமன் பாயின்ட், மும்பை 400 021  என்ற முகவரிக்கு கடிதம் அணுப்பலாம்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்