Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 30/09/2011

காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு

காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு (Cheque Truncation)

1. காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு  என்றால் என்ன?

காசோலை ஒன்று வரைபவரிடமிருந்து, வரையப்படும் வங்கிக்கு காகித வடிவில் பயணம் செய்வது தடுக்கப்பட்டு, அதன் மின்னணு பிம்பத்தை ஊடுகதிர்படம் மூலம்  வரையப்படும் வங்கிக்கு  அனுப்பி தீர்வு செய்யப்படும் தீர்வுமுறைக்கு காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு எனப்படும்.  மின்னணு முறையில் அதன் பிரதிபிம்பம் வரையப்படும் வங்கிக்குஅனுப்பப்படுகிறது. இத்துடன் MICR பட்டை பற்றிய விவரம், சமர்ப்பிக்கப்பட்ட தேதி, சமர்ப்பிக்கும் வங்கி ஆகிய தகவல்கள் அனுப்பிவைக்கப்படும்.  காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு முறையில், தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்கள் தவிர மற்ற நேரங்களில் வங்கியின் கிளைகளுக்கிடையே காகித வடிவிலான காசோலை பரிவர்த்தனைகளை தவிர்க்கப்படுகிறது.  இதனால் காசோலை காகித வடிவில் செல்லுவதற்கு ஆகும் செலவுகள் தவிர்க்கப்படுகின்றன.  மேலும் அதனை காசாக்குவதற்கு ஆகும் நேரம் குறைகிறது.

2. இந்தியாவில் ஊடுகதிர்படம் மூலம் காசோலை தீர்வு ஏன்?

மேலே குறிப்பிட்டவாறு காசோலை ஊடுகதிர்படம் மூலம் தீர்வு முறை விரைவான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  மேலும் காசோலை  தொடர்பான மோசடிகள் நடக்காமலும் ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு அனுப்பப்படும்பொழுது காணாமல் போகாமலும், தீர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை  தவிர்த்தும் சிறப்பாக செயல்பட வழிவகுக்கிறது. மேலும் இதர பிரதான சேவைகள் RTGS மற்றும் NEFT வடிவில் அளிக்கப்படுவதால், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கிடையே வாடிக்கையாளர் பண அளிப்பை இணையதளத்தின் மூலமாக அதே நேரத்தில் சென்றடையுமாறு செய்யமுடிகிறது.  எனினும் பணம் செலுத்தும் வழிகளில் காசோலைகள்  மிகவும் பிரபலம் என்பதால், ரிசர்வ் வங்கி, அவற்றின் திறனை மேம்படுத்த முடிவு செய்தது.  ஊடுகதிர்படம் மூலம்  காசோலை தீர்வு என்பது மேற்கண்டவற்றில் மாற்றுமுறை வழியாகும்.  காகித வடிவிலான ஆவணங்களை மாற்றுவதைவிட ஊடுகதிர்படம் மூலம்  (Cheque Truncation System –CTS) அனுப்புவது பாதுகாப்பானது.

செயல் முறைத் திறனோடுகூட CTS, வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் மனித வளசக்தியை நெறிப்படுத்துதல், குறைந்த செலவு, வர்த்தக சுழற்சி, திறம்மிக்க சேவை, நவீன தொழில் நுட்பம் பயன்படுத்துதல் போன்ற நன்மைகளை அளிக்கிறது.  கொடுப்பு முறைகளில் ரிசர்வ் வங்கியில் ஏற்படுத்தப்பட்ட திறன் மேம்படுத்தும் முன்முயற்சியாக CTS திகழ்கிறது.

3. நாட்டில் CTS அமலாக்கத்தின் தற்போதைய தகுதிநிலை என்ன?

ரிசர்வ் வங்கி, CTSஐ ஒரு முன்னோடி திட்டமாக 2008 பிப்ரவரி 1லிருந்து புதுதில்லி, தேசிய தலைநகர் பகுதியில் அமல்படுத்தியது.  MICR முறைமையிலிருந்து காசோலை CTSமுறைமைக்கு 2009 ஜூலை 1லிருந்து முழுமையாக மாறிய பிறகு NCR ல் பாரம்பரிய MICR அடிப்படையிலான காசோலை தீர்வுமுறை தொடர்வது நிறுத்தப்பட்டது.  CTS ஏற்படுத்திய நன்மைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், நாடெங்கிலும் CTS நடைமுறை அமலுக்குவந்தது.

தொகுப்பு அமைப்பு அடிப்படையில் இதுதிட்டமிடப்பட்டது.  இந்தமுறையில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் காசோலை தீர்வுகளை 5 அல்லது 6 தொகுப்பு அமைப்புகளில் அடக்கிவிடலாம்.  ஒவ்வொரு தொகுப்புஅமைப்பும் தனது ஆதிக்கத்தில் உள்ள மையங்களுக்கு பரிசீலினை மற்றும் தீர்வு சேவைகளை அளிக்கின்றன.  ஒரு தொகுப்பு அமைப்பில் சிறிய/தொலைதூர இடங்கள் மிகுந்த பயனடையும்.  அங்கு முறையான காசோலை தீர்வு ஏற்பாடுகள் இருக்கின்றனவா இல்லையா என்பது ஒரு பிரச்சனையில்லை.

இதை அமலாக்கம் செய்ய அடுத்தக்கட்டத்தில்சென்னை ஒரு முக்கிய மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  சென்னை தொகுப்பு அமைப்பு முழுவதுமாக இயங்கத்தொடங்கும்பொழுது அது சென்னை நகருக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா ஆகிய மாநிலங்களிலும் உள்ள 17 MICR மையங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

4. CTS செயல்முறையை சுருக்கமாகக் கூறமுடியுமா?

ஆம்.  CTS ஏற்பாட்டில் சமர்ப்பிக்கும் வங்கி (அல்லது அதன் கிளை) காசோலை குறித்த விவரங்களை  MICR பேன்டில் பொறித்து,  அதன் பிம்பத்தையும் படமெடுக்கிறது.  இதற்கென வங்கியின் உள்ளக ஏற்பாடாக ஒரு ஊடுகதிர் படமெடுக்கும் எந்திரம் கோர்பேங்கிங்(Core Banking) அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கும் வங்கி இதைச் செய்கிறது. ஆனால் இவ்வாறு தரப்படும் தகவல்கள் படம் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் தர அளவீடுகள் உடையதாக அமைந்திருக்க வேண்டும்.

தகவல்கள் மற்றும் பிம்பங்கள் பாதுகாப்பாக அனுப்பப்படுவது உறுதி செய்யப் படுகிறது.  காசோலையை  ஏற்கும்வங்கி (காசோலை வழங்கும் வங்கி) பொறிக்கப் பட்ட தகவல்கள் மற்றும் பிம்பங்களை  கையொப்பமிட்டு தேவையான முறையில் தீர்வு மையத்தின் மைய செயல்முறைப்பகுதிக்கு அனுப்புகிறது.  அங்கிருந்து அவை குறிப்பிட்ட கடைசிகட்ட வங்கி அல்லது காசோலை வரையப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.  தீர்வு மையத்தில் இவை ஒருவருக்கொருவர் பாதுகாப்புடன் தொடர்பு கொள்ள வசதியாக ஒரு தீர்வுத் தொடர்பு மையம் (CHI) அமைக்கப்பட்டுள்ளது.  தீர்வு மையம் அந்த தகவல்களை முறையாகப் பரிசீலித்து, கணக்கெடுத்து தீர்வுக்குரிய தொகையையும் கண்டபின் பிம்பங்களையும் தேவையான தகவல்களையும் வரையப்படும் வங்கிக்கு அனுப்புகிறது.  இது சமர்ப்பிக்கும் தீர்வு என்று அழைக்கப்படுகிறது.  வரையப்பட்ட வங்கிகள் CHIலிருந்து தகவல்களைப் பிரித்து பரிசீலித்து, பணம் அளித்திட தீர்வினைத் தொடர்கிறது.  பண அளிப்பு மறுக்கப்பட்டவைகளுக்கு திரும்பும் கோப்புகளை வரையப்படும் வங்கியின் CHIக்கள் தயாரிக்கும் இந்த கோப்புகளும் பரிசீலினை செய்யப்பட்டு, சமர்ப்பித்த வங்கிக்குத் திருப்பு அனுப்பப்படும்.  சமர்ப்பிக்கும் தீர்வு பின்னர் தொடர்ந்து மறுக்கப்பட்ட காசோலைக்கான கோப்பு இரண்டும் முடிக்கப்படுகையில் தீர்வு சுழற்சி வட்டம் முடிவடைந்ததாகக் கருதலாம்.  காகித வடிவிலான  காசோலைகள் அனுப்பப்படாமல் அவற்றின் பிம்பம் மூலம் தீர்வு நடத்தப்படுவது CTSன் முக்கிய அம்சமாகும்.

5. எந்தவிதமான காசோலைகளை CTSமூலம் தீர்வுக்கு அனுப்பவேண்டும்?

எல்லாவிதமான காசோலைகளும் CTS மூலம் தீர்விற்கு அனுப்பலாம்.  காகிதவடிவிலான காசோலைகள் மூலம் செய்யப்படும் பாரம்பரிய தீர்வுமுறை செயல்பாட்டிலிருந்து பெருத்த அளவில் வேறுபாடு இல்லை.  விரைவுத் தீர்வுக்கு அளிக்கப்படும் காசோலைகளும் கூட CTSமூலம் அனுப்பப்படுகின்றன.  (விரைவுத் தீர்வு சம்பந்தமான விவரங்களுக்கு ஐயங்களும் தீர்வுகளும்(FAQ) பகுதியை பார்க்கவும்).  காசோலை சமர்ப்பிக்கும் வங்கி மற்றும் வரையப்படும் வங்கி ஒரே வங்கியாக இருப்பதை CTS அனுமதிப்பதில்லை.  தீர்வு மையத்தின் முதல் நிலையிலேயே அவைகள் தடுக்கப்படுகின்றன.

காகிதவடிவில் இல்லாமல் பிம்பங்கள் வடிவில் காசோலைகள் அனுப்பப்படுவதால் CTSல், பூகோள எல்லைப் பிரச்சனைகள் இல்லை.  இம்மாதிரி நன்மையைப் பெற CTS தீர்வு அமைப்பு (Grid CTS) மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   அமைப்பு மையங்களின் கீழ் செயல்படும் தீர்வு மையங்களில் செய்யப்படும் தீர்வுகள் உள்ளூர் தீர்வின் ஒரு பகுதியாகும்.  புதுதில்லியில் தற்போது செயல்படும் CTS விரிவாக்கி, புதுதில்லி CTS தீர்வு அமைப்பு மையங்களின் அங்கமாக செயல்பட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6. வாடிக்கையாளர்களுக்கு நடைமுறையில் ஏதேனும் மாற்றம் உண்டா?

இல்லை.  வாடிக்கையாளர்கள், தற்போது உள்ளதுபோலவே சரியான மை கொண்டு எழுதி காசோலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.  எனினும் அரசுத் துறையிலிருந்து பணம் அளிக்கப்பட்ட காசோலைகள் பெறும் வாடிக்கையாளர்கள் வெறும் பிம்பங்களை மட்டுமே பெறுவர்.  முக்கிய அம்சங்களில் திருத்தங்கள் உள்ள  (பின்னர் விரிவாக விளக்கப்படும்) காசோலைகள் CTS சூழலில் பரிசீலிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

7. வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு CTSன் நன்மைகள் என்ன?

பல்வேறு நன்மைகள் உள்ளன.  காசோலையை படம் எடுத்து அதன் பிம்பத்தை பயன்படுத்துவதால் காகித வடிவிலான காசோலைகளின் போக்குவரத்து நிறுத்தப் படுகிறது.  காசோலைகளின் பிம்பங்கள் மின்னணு ஊடகத்தின் மூலம் பயணம் செய்வதால் காசோலைத் தீர்வுகளின் வேகம் அதிகரிக்கிறது.  தீர்வுச் சுழற்சிகளும் பெருமளவு குறைகிறது.  மேலும் புழக்கத்தின்போது காசோலைகள் தொலைந்து போகாமல் இருக்கும்.   எல்லைகள் கடந்தும் பூகோள பரப்பு கடந்தும் காசோலைகளின் பிம்பங்கள் செல்கின்றன.  வெவ்வேறு வகை பல்நோக்கு தீர்வு இடங்கள் ஒன்றாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.  தேசிய அளவில் ஒரு சமச்சீரான முறைகளையும் நடைமுறைகளையும் ஏற்படுத்துகிறது.

CTS காசோலைகளை அளிப்போருக்கும் பயன்களை அளிக்கிறது.  காகித வடிவிலான காசோலைக்களுக்கான எதிர்காலம் வெகுவாக குறைகிறது.  நிறுவனங்களுக்கு அவர்களது உள்ளக தேவைகளுக்கு, வங்கிகள் காசோலைகளின் பிம்பங்களைத் தருகிறது.   காகித வடிவிலான உபகரணங்களில் மோசடிகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.  இம்முறையில் அவை பெருமளவு குறைகின்றது.  பிம்பங்கள் மட்டுமே செல்வதால் பணம் அளிக்கப்பட்ட காசோலைகள் திரும்பும் நேரம் வெகுவாகக் குறைகிறது.  இதனால் ஏதேனும் திருத்தங்கள் அல்லது முறைகேடுகள் நிகழ்ந்திருந்தால் உடனுக்குடன் கண்டுபிடிக்க ஏதுவாகிறது.

CTS மொத்தத்தில் ஒரு மேம்பட்ட முறைமையை அளிக்கிறது.  காசோலை மோசடிகள், கீழ்க்கண்ட முன்னேற்றங்களுக்குப் பிறகு பெரிதும் குறைந்துள்ளது.  பார்கோட்  (bar-code)போன்ற பொறிக்கப்பட்ட அம்சங்கள், சின்னங்கள், பளபளக்கும் வில்லைகள், நீர்க்குறியீடுகள் ஆகிய புதிய தொழில் நுட்ப யுக்திகளைக் கொண்டு போலி/ திருத்தப்பட்ட உபகரணங்கள் எளிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன.

CTSன் நன்மைகளை கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.

• குறுகிய தீர்வு சுழற்சி
• சிறந்த  சரிபார்க்கும் மற்றும் சரிசெய்யும் நடைமுறை
• பரப்பெல்லை வரைமுறை கிடையாது
• வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் திறமையான செயல்பாடு உள்ளது
• காகித வடிவிலான  தீர்வு முறையில் உள்ள இடர்வரவுகள் மற்றும் செயல்முறை இடர்வரவு பெருமளவு குறைகின்றன

8. ஒரு வாடிக்கையாளர் தான் வெளியிட்ட காசோலையை காகித வடிவில் பார்க்க விரும்பினால் அதற்கு வாய்ப்பு உண்டா?

காகித வடிவிலான  காசோலைகள் சமர்ப்பிக்கும் வங்கியிடமே இருக்கும் அவை பணம் அளிக்கும் வங்கியிடம் செல்வதில்லை.  ஒருவேளை வாடிக்கையாளர் விருப்பப்பட்டால், வங்கிகள் சான்றளிக்கப்பட்ட காசோலை படங்களை அளிக்கலாம்.  எனினும் வாடிக்கையாளர் கண்டிப்பாக காகித வடிவிலான  காசோலையை பார்க்க ஆசைப்பட்டால், சமர்ப்பிக்கும் வங்கியிடம் விண்ணப்பித்து பெறவேண்டும்.  இதற்கு கட்டணமும் செலுத்தவேண்டும்.  சட்டபூர்வ தேவைகளுக்காக வங்கிகள் காகித வடிவில் உள்ள காசோலைகள் மற்றும் உபகரணங்களை 10 ஆண்டுகளுக்கு வைத்திருக்கவேண்டும்.

9. காகித வடிவிலான  காசோலையின் தனித்தன்மை எவ்வாறு படம் பிடிக்கப் படுகிறது மற்றும் அது எவ்வாறு காசோலை படத்திற்கு மாற்றப்படுகிறது?

இந்தியாவில் CTS பரிந்துரைக்கப்பட்ட வடிவ அளவீடுகளை வலியுறுத்துகிறது.  இத்தகைய அளவீடுகளை பூர்த்தி செய்யாத வடிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன.  வடிவங்களின் அடிப்படையில் பணம் அளிக்கப்படுவதால்,  வடிவங்களின் தரத்தை பராமரித்திட CTS தீர்வு , சூழற்சியில் தரக்கட்டுப்பாடு மிகக் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.  பல்வேறு நிலைகளில், வடிவத்தின் தரம் மதிப்பீடு (Image Quality Assessment-IQA) செய்யப்படுகிறது.  காசோலையை சமர்ப்பிக்கும் பொழுது வடிவத்தை படம் பிடிக்கும் நிலையிலேயே,   வடிவ தரம் மதிப்பீடு சமர்ப்பிக்கும் வங்கியால் செய்யப்பட வேண்டும்.  சமர்ப்பிக்கும் வங்கியின் மின்னணு கையெழுத்துகளுடன் வடிவங்கள் படம் பிடிக்கப்பட்டு, அதன்பின்பு தீர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு,  அதன்பின் பணம் அளிக்கும் வங்கிகளை சென்று சேரும்.  மேலும் வடிவ தர மதிப்பீடு நுழைவாயிலிலேயே செய்யப்பட்டு, அதன் பின்னர் தீர்வு மையத்திற்கு அனுப்பப்படும்.  பணம் அளிக்கும் வங்கிகள் ஏதேனும் காரணத்தால் வடிவத்தின் தரத்தில்  திருப்தி அடையவில்லையென்றால், பணம் அளிக்கும் நடைமுறைக்காக காகித வடிவிலான  உபகரணத்தைக் கேட்கலாம். மேலும் புதிய காசோலை தரம் CTS 2010 பரிந்துரைப்பது என்னவென்றால் கட்டாய மற்றும் விருப்ப பாதுகாப்பு அம்சங்கள் காசோலைகளில் உள்ளதா என அதன் தனித்தன்மையை காட்டுகிறதா என்றும் பார்க்கப்படுகிறது.

10. இந்தியச் சூழலில் CTSல் காசோலைக்கான மின்பிம்ப வரையறைகள் என்னென்ன?

காசோலைகளின் வடிவங்களை படம்பிடித்தல் என்பது பல்வேறு தொழில்நுட்ப அடிப்படையில் நடக்கின்றது.  காசோலை மின்பிம்ப வடிவங்கள் கருப்பு மற்றும் வெள்ளை, சாம்பல் நிறம் அல்லது வண்ணமயமாக இருக்கும்.  இவைகள் அனுகூலங்கள்  மற்றும் பிரதிகூலங்கள் என்ற இரண்டையும் கொண்டதாக இருக்கும். கருப்பு மற்றும் வெள்ளை வடிவங்கள் வடிவ அளவில் இலகுவாகவும், ஆனால் காசோலைகளில் உள்ள நுண்ணிய அம்சங்கள் வெளிக்காட்டப்படாமலும்  உள்ளது.  வண்ணமயமான வடிவங்கள் மிகவும் பொருத்தமானதாக இருந்தாலும் இதற்கு அகண்ட வரிசை தேவைகலும் சேமிப்பு கொள்ளளவும் அதிகம் தேவைப்படுகிறது.   சாம்பல் நிற வடிவங்கள் இடைப்பட்ட நிலையில் உள்ளன.  இந்தியாவில் CTS சாம்பல் நிற மற்றும் கருப்பு மற்றும் வெள்ளையின் கலவையான வடிவங்களில் இருக்கும்.  ஒவ்வொரு காசோலைக்கும் மூன்று விதமான வடிவங்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். – முன்பகுதி சாம்பல் நிறம், முன்பகுதி கருப்பு மற்றும் வெள்ளை மற்றும் பின்பகுதி கருப்பு மற்றும் வெள்ளை.

11. காசோலைகளின் மின்னணு பிம்பங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன?

ஊடுகதிர்படக்கருவி மூலம் காசோலைகளின் வடிவங்கள் படம் எடுக்கப் படுகின்றன.  ஊடுகதிர்பட கருவிகள், புகைப்பட நகல் எடுக்கும் கருவிகள் போல், ஆவணத்தின் மீது குறுகிய வழியில் ஒளியை படர விடுகின்றன.  சிறிய அளவிலான நுண்ணறி கருவிகள் ஒளிவீச்சுப்பாதையில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் வரும் பிரதிபலிப்பை அளிக்கின்றன.  ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் வரும் பிரதிபலிப்பு அளவீடுகள் பிக்ஸல்(pixel) என்று அழைக்கப்படும்.  வடிவங்கள் கருப்பு வெள்ளை, சாம்பல் அல்லது வண்ணங்கள் அடிப்படையில் பிக்ஸல்கள் மாற்றப்படும்.  சாம்பல்நிற பிக்ஸல்கள் பெற, பிக்ஸல்கள் சாம்பல் நிறத்தில் உள்ளவை போன்று ஒன்றாக அடுக்கப்பட்டு கருப்பு வெள்ளைக்கு இடையே பொருத்தப்படும்.  மூல ஆவணத்தின் மொத்த வடிவமும், சாம்பல் நிற, வெளிர் நிறத்திலோ, அடர் நிறத்திலோ அந்தந்த வண்ணத்தைப் பொறுத்து அமைந்துவிடும்.  கருப்பு மற்றும் வெள்ளை வடிவங்களைப் பொறுத்தவரை, இரண்டு வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டும்.  கருப்பு வெள்ளை வடிவம் இரத்டை நிற பிம்ப வடிவம் என்றும் அழைக்கப்படும்.

12. இணைப்பு வலைமூலம் எவ்வாறு வடிவம் மற்றும் தகவல் அனுப்பப்படுகிறது?

பொது திறவு கட்டமைப்பு(Public Key Infrastructure - PKI) பயன்படுத்தி, பாதுகாப்பு, உண்மைத்தன்மை மற்றும் புள்ளி விவரத்தின் நம்பகத்தன்மை மற்றும் வடிவம் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.  அதனால் பணம் கொடுக்கும் வங்கி(paying bank)யிலிருந்து பணம் பெறும் வங்கி(payee bank)க்கு பாதுகாப்பாக இவை அனுப்பி வைக்கப்படும்.  தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000த்தின் தேவைகளுக்கு கட்டுப்பட்டதாக, CTS உள்ளது.  தோற்றுவிக்கும் இடத்திலேயே  தகவல்கள் மற்றும் வடிவங்களில் கையெழுத்திடவேண்டுமென்பது சமர்ப்பிக்கும் வங்கிக்கு கட்டாயமாகிறது.  சமர்ப்பிக்கும் வங்கி, தீர்வு மையம், பெறும்வங்கி ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த முறைமைக்கும் PKI பயன்படுகிறது.  PKI தர அளவுகள் பொருத்தமான இந்திய சட்டங்களுக்கு இணக்கமாக உள்ளது.  மற்றும் வங்கி தொழில் நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு பயிலகத்தின் (Institute for Development and Research in Banking Technology – IDRBT) நடைமுறைகளுக்கும் ஏற்றவகையில் உள்ளது.

13. காசோலை தரமயமாக்குதல் மற்றும் CTS 2010 தரம் என்றால் என்ன?

காசோலை தாள்களின் அளவு, MICR பட்டை, காகிதத்தின் தரம் போன்றவற்றில் நல்ல தரமயமாக்கலை ஏற்படுத்துவது காசோலை தீர்வு முறையில் இயந்திர மயமாக்கலை அமல்படுத்த உதவுகிறது.  காலப்போக்கில் வங்கிகள் புதிய வடிவங்கள் கொண்ட காசோலை வகைகளை அறிமுகப்படுத்தின.  புதிய பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தின. இதன்மூலம் காசோலையை தவறாகப் பயன்படுத்துதல், மோசடி செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல் போன்ற சம்பவங்கள் குறைகின்றன.  நகரங்களுக்கிடையே வளர்ந்துவரும் புழக்கம் உடனுக்குடன் பணம் தரப்படும் காசோலைகள், எந்தக்கிளையிலும் பணமாக்கும் காசோலைகள், CTSன் அறிமுகம், விரைவு தீர்வின் அதிகரிக்கும் பிரபல்யம் போன்றவைகள் சில குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் காசோலைகளுக்கு பரிந்துரைக்கப்படக்காரணமாயின.  ரிசர்வ் வங்கியால் ஒரு செயற்குழு ஏற்படுத்தப்பட்டு, காசோலைகள் தரமயமாக்கலை மேலும் மேம்படுத்தி அதன்மூலம் காசோலை தீர்வு முறையில் சிறப்புத்தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அதன்படி சில அளவுகோல்களை காசோலைகள் தரமயமாக்கலுக்காக வங்கிகள் நாடுமுழுமைக்கும் பரிந்துரைத்துள்ளன.  அவை காகிதத்தின் தரம், நீர்க்குறியீடு, வங்கியின் முத்திரையை கண்ணுக்குத் தெரியாத மையிலும் மற்றும் காசோலைகளை கள நிலை நிறுத்தலுக்கான தரமயமாக்கலும் ஆகும்.  இதனோடு சில விரும்பத்தக்க அம்சங்களும் தேவை மற்றும் இடர்வரவு எதிர்பார்ப்பின் அடிப்படையில் சேர்க்கப் படுகின்றன. குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் வெளியிடும் காசோலைகளுக்கும் சமச்சீரான தன்மையை அளிப்பதோடு, காசோலைகளை பரிசீலித்திடவும்/ அறிந்திடவும் சமர்ப்பிக்கும் வங்கிகளுக்கு உதவுகிறது.  பாதுகாப்பு அம்சங்களின் சீரான ஒருமுகத் தன்மை, காசோலை மோசடிகளுக்குத் தடுப்பாக அமைகிறது.  குறைந்தபட்ச அளவீட்டு பரிந்துரைகள் மொத்தமாக ‘CTS 2010 தரம்’ என்று அழைக்கப்பட்டது.  இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் இந்திய தேசிய பணம் அளிப்பு கழகம் (National Payment Corporation of India –NPCI) ஆகியவை இணைந்து புதிய தரத்தின் அமலாக்க விஷயத்தில் வங்கிகளுக்கு உதவுகின்றன.

14. காசோலைபடிவங்களில் மாற்றங்கள்/திருத்தங்கள் குறித்த பரிந்துரைகள் யாவை?

வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் காசோலை மோசடி விஷயத்தில் பாதுகாப்பு தரும்விதமாக, காசோலைகளில் மாற்றங்கள்/திருத்தங்களைத் தடுப்பது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  காசோலைகளில் (தேவைப்பட்டால் மதிப்பளிக்கும் தேதிதவிர) எந்தவித மாற்றங்களையும்/திருத்தங்களையும் செய்யக் கூடாது.  பணம் அளிக்கப்படுபவரின் பெயரில் மாற்றம் இருந்தாலோ, எண்களில் எழுதப்படும் தொகையில் மாற்றம் இருந்தாலோ, வாடிக்கையாளர்கள் புதிய காசோலைத்தாள்களை  பயன்படுத்த வேண்டும்.  இதனால் வங்கிகள் மோசடியான திருத்தங்களைக் கண்டுபிடித்துத் தடுக்க உதவுகிறது.  2010 டிசம்பர் 1லிருந்து CTS தீர்வுமுறைக்கு உள்ளாகும் காசோலைகளுக்கு மேற்கண்ட பாதுகாப்பு உண்டு.  எனினும் தற்போது மற்ற முறைகளில் தீர்வு செய்யப்படும் காசோலைகளுக்கு இது பொருந்தாது.

15. மோசடிகளைத் தவிர்க்க வங்கிகள்/வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

வங்கிகள்/வாடிக்கையாளர்கள் CTS2010 காசோலைகளை பயன்படுத்த வேண்டும். இது வடிவத்தில் எளிமையானதாகவும் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும்  உள்ளது. CTS 2010 தரத்தை பூர்த்தி செய்யும் காசோலை படிவங்களைக் கொடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளைக் கேட்க வேண்டும்.  நல்ல தரமான நன்கு தெரியும் மை கொண்டு வாடிக்கையாளர்கள் காசோலைகளில் எழுதவேண்டும்.  இதனால் தேதி, பணம் பெறுபவரின் பெயர், தொகை மற்றும் கையெழுத்து  இவற்றில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.  ரப்பர் ஸ்டாம்புகள் பயன்படுத்துவதால் அடிப்படையான மேற்கண்ட அம்சங்கள் மறைக்கப் படக்கூடாது.  ஊடுகதிர் பட முறையில் ஒரு காசோலையின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் படம் பிடிக்கப்படுவதை வங்கிகளும்/ வாடிக்கையாளர்களும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

16. எந்தெந்த விதங்களில் CTSல் வங்கிகள் பங்கேற்கலாம்?

CTSல் வங்கிகள் இரண்டு விதங்களில் பங்கேற்கலாம்.

அ.  நேரடி அங்கத்தினர்:  தீர்வு செய்யும் வங்கிகளிடம் தீர்வு செய்யும் கணக்குகள் கொண்ட வங்கிகள், CTSல் பங்குகொள்ள கட்டமைப்புகள் இருக்கும்பட்சத்தில் நேரடியாக அங்கத்தினராக பங்கு கொள்ளலாம்.

ஆ. நேரடியாக அல்லாத/துணை அங்கத்தினர்:  வங்கிகள் சில நேரடி அங்கத்தினர்களின் துணை அங்கத்தினர்களாக CTS கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி தீர்வு சேவைகளைப் பெறலாம்.  இத்தகு  துணை அங்கத்தினர் வங்கிகளுக்கு தீர்வுக்கணக்கு இருக்குமானால், அந்த கணக்கின் மூலம் தீர்வு செய்யப்படும் அல்லது நேரடி அங்கத்தினரின் கணக்கு மூலமாகவும் தீர்வு செய்யப்படும்.

17. CTSல் பங்குபெறும் வங்கிகளுக்கான கட்டமைப்புத் தேவைகள் எல்லா வங்கிகளுக்கு ஒரே மாதிரி இருக்குமா?

CTSஐ நடைமுறைப்படுத்த தேவையான வன்பொருள், மென்பொருள் கட்டமைப்பு அவசியமாகும்.  அது வங்கி தீர்வு மையத்துடன் தொடர்பு கொள்ளத் தேவையான வசதியை அளிக்கும்.  இது CTSல் வங்கி பங்கேற்கத் தேவையான கட்டமைப்பாகும்.  இதற்கான தொடர்பு மென்பொருள் வசதியை பயன்பாட்டு முறைமை, தகவல் அடித்தளம், மூன்றாம் பயன்பாட்டுக்கான மென்பொருள் RBI அங்கத்தினர் வங்கிகளுக்கு அளிக்கிறது.

இவற்றோடு அனைத்தையும் படம்பிடிக்கத் தேவையான மென்பொருளை வங்கிகள் தாங்களே வாங்கி அமல்படுத்திட வேண்டும்.

ஒவ்வொரு வங்கியின் பட்டைத் தேவையளவு என்பது பலவிஷயங்களைப் பொறுத்து கணக்கெடுக்கப்படும் காசோலைகளின் போக்குவரத்து அளவு, மின்னணு பிம்பத்தின் சராசரி வடிவ அளவு, தொடர்பு வசதிகளின் திறன் ஆகிய பலவற்றைப் பொறுத்து ஒவ்வொரு வங்கியின் பட்டைத் தேவையளவு தீர்மானிக்கப்படும்.

18. மேலும் இது குறித்து விளக்கங்கள் Applicant தேவைப்பட்டால் வழிகாட்டுதலுக்கு யாரை அணுகலாம்?

துணைப் பொதுமேலாளர், தேசிய தீர்வு மையம், இந்திய ரிசர்வ் வங்கி, 7வது மாடி, கட்டிடம்1, ஜீவன் பாரதி கட்டிடம், கன்னாட் சதுக்கம், புதுதில்லி 110 001.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்