Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - Dept of Banking Supervision
 

வங்கி மேற்பார்வைத் துறை (DBS)

 

1949ஆம் வருடத்திய வங்கிகள் ஒழுங்குமுறைச்சட்டம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு வணிக வங்கிகளை மேற்பார்வையிடவும் ஆய்வு செய்யவும் அதிகாரம் அளிக்கிறது. சட்டரீதியான் இந்த அதிகாரங்கள், வங்கிகள் இருக்குமிடத்திற்குச்சென்று ஆய்வு செய்யவும், அப்படிப்போகாமல் தேவையான ஆவணங்களையும், விபரங்களையும் அறிக்கைகளையும் பெற்று மேற்பார்வையிட்டு கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

1993வரை ஒழுங்கீட்டாளர் பணியும், மேற்பார்வையிடும் பணியும் வங்கிகளின் இயக்கம் மற்றும் வளர்ச்சிக்கான துறையால் (DBOD) செய்யப்பட்டு வந்தன. பின்னர் வங்கிகளை மேற்பார்வையிடும் பணிக்கெனத் தனியாக வங்கி மேற்பார்வைத்துறை(DBS), வங்கிகளின் இயக்கம் மற்றும் வளர்ச்சிக்கான துறையிலிருந்து பிரிக்கப்பட்டு தனியே துவக்கப்பட்டது. வங்கிகள், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் என்று கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்துக்குமான ஒன்றிணைந்த மேற்பார்வையிடும் நிதியியல் மேற்பார்வை கண்காணிப்புக் குழுமம் (BFS) என்றோர் குழுமம் 1994 நவம்பரில் ஏற்படுத்தப்பட்டது. வங்கி சாரா நிதி திறுவனங்களை மேற்பார்வையிடுவதில் முழுக்கவனம் செலுத்துவதற்காக 1997 ஆகஸ்ட் மாதத்தில் வங்கி மேற்பார்வைத் துறையிலிருந்து, வங்கி சாரா நிதி நிறுவன மேற்பார்வைத்துறை (DNBS) தனியாகத் துவக்கப்பட்டது. வணிக வங்கிகளையும் வளர்ச்சி நிதி நிறுவனங்களையும் மேற்பார்வையிடுதல் நிதியியல் மேற்பார்வை கண்காணிப்புக் குழுமத்தின் (BFS) வழிகாட்டுதல்களுக்கிணங்கச் நடைபெறுகின்றது.

  1995 ஜனவரி மாதத்தில் குழுமம் அதனது துணைத் தலைவரைத் தலைவராக நியமித்து துணை ஆய்வுக்குழு ஒன்றினை ஏற்படுத்தியது. வங்கிகள், வளர்ச்சி நிதி நிறுவனங்கள் மீதான சட்டரீதியான ஆய்வினையும், வங்கிகளின் உன்னத ஆய்வுப் பணிகளையும் நல்லமுறையில் சீராக்கி மேம்படுத்துவதே இத்துணை குழுவின் தலையாய வேலை.

 

வங்கிகளை நேரடி ஆய்வு செய்தல்

வங்கி மேற்பார்வைத் துறை, வருடத்திற்கு ஒரு முறை வங்கி களின் தலைமை அலுவலகம், ஒன்றிணைந்த அலுவலகங்கள் மற்றும் குறிப்பிட்ட கிளைகளை ஆய்வு செய்கிறது. வங்கிகள் வழங்கும் கடன்கள் ஒரளவுக்கு இந்த ஆய்வுகளில் பரிசீலனை செய்யப்படுகின்றன. ஆண்டு நிதிநிலை ஆய்வு (AFI) வருடத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்துக் கடன்களையும் தீர்க்கும் நிதி வசதி, எளிதில் பணம் வழங்கும் வசதி, ஆரோக்கியமான நறைமுறைகள் ஆகியவைகள் மீது இந்த ஆய்வு சிறப்புக் கவனம் செலுத்தும். உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட (CAMELS ) முறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. போதுமான மூலதனம், சொத்துக்களின் தரம், நிர்வாகம், வருமானம், எளிதில் பணம் வழங்குதல், நல்லநடைமுறைகளும் கட்டுப்பாடும் என முறையே Capital adequacy, asset quality, management, earning, liquidity, system & Control என்ற ஆங்கிலச் சொற்களின் உயர்நிர்வாகத்திற்கு, உடனடியாக கொடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி மேலாண்மைக் கடிதம் எழுதுகிறது. வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் நேரடியாகச் சந்தித்து ஆண்டு நிதிநிலை ஆய்வறிக்கை மீது விவாதங்கள் நடத்தி செயலாற்றலுக்கான திட்டம் தீட்டப்பட்டு அதன் அமலாக்கம் கண்காணிக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்திய வணிக வங்கிகளின் தர நிர்ணயங்கள் வழங்கப்படுகின்றன.

 

வங்கிகளைக் கண்காணித்தல்

வங்கிகளின் உள்நாட்டு இயக்கங்களைக் கண்காணிக்க, இரு ஆண்டு நிதிநிலை ஆய்வுகளுக்கு இடையிலான கால கட்டத்தில், வங்கியின் நிதிநிலைமை ஆரோக்கியத்தைப்பற்றிப் பரிசீலிப்பதற்காக 1995 லிருந்து இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. நிதி நிலைமை ஆரோக்கியம் குறைந்திருந்தால் அது உடனே அறியப்பட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இது உதவுகிறது.

1995இல் வங்கிகள், ஐந்து காலாண்டு அறிக்கைகளும் இரண்டு அரையாண்டு அறிக்கைகளும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டன. வங்கியின் கடன், கடன்தாரர்கள் பற்றிய விபரங்கள், நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடுகள் போன்ற விபரங்களை உள்ளடக்கிய அறிக்கைகள் தான் அவை. சொத்துக்களின் தரம், எளிதில் பணம் வழங்கும் நிலை, இந்திய – அந்நிய நாணய வட்டி விகிதங்களில் எதிர்நோக்கும் அபாய நேர்வுகளைப்பற்றி நான்கு காலாண்டு அறிக்கைகள் அளிக்க வேண்டுமென 1999 ஜுன் மாதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 1, 2000 தேதி முதல் அறிக்கைகள் மீதான காலவரையறையைக் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாகம்

அனைத்துக் கிளைகளையும் ஒருங்கிணைத்து திறம்பட நிர்வாகிக்கும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடு ஆய்வுகளை எங்ஙனம் மேற்கொள்வது என்பது பற்றியும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. உடனுக்குடன் ஆய்வு, சுதந்திரமான ஆய்வுக்குழு, குழுமத்தில் ரிசர்வ் வங்கியின் நியமன உறுப்பினர்கள், ஆய்வறிக்கையின் மீது பின்பற்றி நடத்தலை உறுதி செய்யும் தனிஅதிகாரி நியமனம், போன்றவை சில நடவடிக்கைகளாகும். ஜிலானி குழுவின் பரிந்துரைகள் அமலாக்கம் செய்யப்படுவதையும் ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது.

 

முயற்சிகளும் ஆணைகளும்

ரிசர்வ் வங்கி மேலாண்மையில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நிதி சம்பந்தமான பலவீனமாக இருக்கும் வங்கிகளுக்கு காலாணடுக்கு ஒருமுறை சென்று கண்காணிப்பது, கண்காணிப்பு அலுவலரை நியமித்தல் போன்ற பல முயற்சிகளை மேற் கொண்டுள்ளது. நிதியியல் மேற்பார்வை கண்காணிப்பு குழுமத்தின் செயலாக்க கரமாக வங்கி மேற்பார்வைத்துறை விளங்குகிறது. மேற்பார்வை கண்காணிப்பு சம்பந்தமாக கொள்கை முடிவுகளை குழுமம் தீர்மானிக்கிறது. கணக்காய்வாளர்களை நியமித்தல், புகார்களை ஏற்று குறை தீர்த்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறது. மோசடி வழக்குகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வங்கிகளுக்கு உதவுகிறது. வங்கிகளும் நிதிநிறுவனங்களும் Y2K தரச்சான்றடைய வழிகாட்டுதல்களை அளித்துதவுகிறது.

முக்கியக் கொள்கைகள்

வங்கி அரங்கத்தில் ஏற்பட்டுள்ள புதிய சீரமைப்புகளின் பின்னணியில், உள்ளக ஆய்வு கட்டுப்பாடுகளில் உலகளாவிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் உலகத்தரம் வாய்ந்த பலமுள்ள இந்திய வங்கிகளை உருவாக்குவதே தலையான குறிக்கோள் என்றால் அது மிகையாகாது. தேவைகளை அறிந்து கொள்ள விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பன்னாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத் தீர்வுக்கான வங்கி (BIS) வகுத்தளித்த 25 முக்கியப் பணிகளில் எங்கெல்லாம் எவ்வளவு தொய்வுற்று இருக்கின்றோம், அதனை எப்படி சீர்செய்வது என்பதைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பல தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் ஆய்வையும், கண்காணிப்பையும் மேம்படுத்தி உலகத்தரத்திற்கு ஒப்ப நமது மேலாண்மையையும் உயர்த்தி வருகின்றோம்.

நிதிநிறுவனங்கள் மீதான கண்காணிப்பு

உள்ளகக் குழு ஒன்றின் பரிந்துரைகளின் படி நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வேலையை 1990இல் தொடங்கியது. காலாண்டு அறிக்கைகளை அவர்களிடமிருந்து பெற்று அவர்களது பொறுப்புகளையும் சொத்துகளையும் ஆராய்ச்சி செய்து, நிதி ஆதாரங்களைத் திரட்டுவது பயன்படுத்தப்படுவது, போன்றவற்றையும் கண்காணிக்க இந்த அறிக்கைகள் உதவின. வங்கிகளுக்கும் நிதிநிறுவனங்களுக்கும் நல்லுறவை வளர்ப்பதும் இதன் குறிக்கோள். 1994 இல், தரத்திற்கான வழிமுறைகள் நிதிநிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டன.

நிதிநிறுவனங்களை மேற்பார்வையிடவும் ஆய்வு செய்யவும் CAMELS முறையே பின்பற்றப்பட்டது. சில நிதி நிறுவனங்கள் வளர்ச்சிக்காகவே பங்காற்றுவதாலும், சில மற்ற நிறுவனங்களை மேற்பார்வையிடுதலையும் கண்காணித்தலையும் செய்வதால் அச்செயல்களைச் சீர்தூக்கிப்பரிசிலனை செய்தலையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.

புதிதாகத் துவக்கப்பட்ட பிரிவு 10 இந்திய நிதி நிறுவனங்களை மேற்பார்வையிட்டு ஒழுங்கு முறைகளை அறிவிக்கின்றன. IDBI, ICICI, IFCI, IIBI, EXIM Bank, NABARD, NHB, SIDBI, IDFC, TFCI போன்றவை அவை இவைகளிடமிருந்து அறிக்கைகள் பெற்று ஆய்வு செய்யும் முறை மேற் கொள்ளப்படுகிறது.

  LIC, GIC, UTI போன்ற பெரிய நிறுவனங்களிடமிருந்தும் பொறுப்பு சொத்து அறிக்கைகளைப் பெற்று, நாட்டின் பொருளாதாரநடவடிக்கைகளில் நிதி நிறுவனங்களின் தாக்கமும் பங்களிப்பும் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு நாட்டின் ஒட்டு மொத்தமான நிதிசம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் சேகரித்து உதவுகிறது.

 

 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்