Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - தகவல் அறியும் உரிமைச் சட்டம்
 
 
குறிப்பு : ஒழுங்குபடுத்தப்பட்ட அச்சுப்பிரதிகளைப் பெற தயவுசெய்து இந்த ஆவணங்களை உங்கள் கணிணியில் தளவிரக்கம் செய்துகொள்ளவும், அதன்பின் அதுசார்ந்த மென்பொருளை பயன்படுத்தி தகவல்களை அச்சுபிரதி எடுத்துக் கொள்ளவும். (136 kb)
தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

 

2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியுள்ளது (www.persmin.nic.in). 2005 அக்டோபர் 13 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல் பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல் பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல் பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.

 

இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள் / கடமைகள்

 இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பொது அலுவலகமாகக் குறிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்குத் தகவல்கள் அளிப்பது ரிசர்வ் வங்கியின் கடமையும் பொறுப்புமாகும்.

மேலே செல்ல

பிரிவு 4(i)(b) - தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

பிரிவு 4(1)(b)

சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட வேண்டிய தகவல்கள்

(i)

அமைப்பு / நிறுவனத்தின் விபரங்கள், பணிகள், கடமைகள்

(ii)

அதிகாரிகள், அலுவலர்களது பணிகளும் அதிகாரங்களும்

(iii)

மேற்பார்வையிடுதல், பொறுப்பேற்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் விதம் பற்றிய நடைமுறைகள்

(iv)

தனது பணிகளைச்செய்ய வங்கியின் வழிமுறைகள்

(v)

வங்கி வைத்திருக்கும் / கையாளும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவுரைகள், அறிவுரைகளின் தொகுப்புகள், ஏடுகள் – அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் தங்கள் பணிகளைச்செய்யப் பயன்படுத்தும் ஏடுகள்

(vi)

ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆவண வகைகளின் பட்டியல்

(vii)

பொதுமக்கள் / அவர்கள் பிரதிநிதிகளைக் கலந்து முடிவுகள் எடுக்க / அமலாக்க ஏதேனும் திட்டம்/பழக்கம்

(viii)

அறிவுரைக்காக குழுமம், குழு – 2 அல்லது அதற்கு மேற்பட்டதாக கொண்ட அமைப்பு – இந்த அமைப்புகளின் கூட்டம் பொது மக்களுக்குத் திறந்து விடப்படுகிறதா

(ix)

அதிகாரி / அலுவலர் பெயர் முகவரி கொண்ட தொகுப்பு

(x)

மாதச்சம்பளம் / சலுகைகள்

(xi)

திட்டங்கள் / பட்ஜெட்டுகள் / உத்தேச செலவுகள்

(xii)

பொருந்தாதது

(xiii)

சலுகைகள் பெறுவோர் விபரம், அங்கீகாரம்

(xiv)

மின் அணுமுறையில் கொ டுக்கப்பட்ட தகவல்களின் விபரங்கள்

(xv)

தகவல் பெற குடிமக்களுக்கு உள்ள வசதிகள், பொது உபயோகத்துக்கான நூலகம், படிப்பறைகளின் வேலை நேரங்கள்

(xvi)

பொதுத் தகவலதிகாரியின் பெயர் மற்றும் முகவரி

மேலே செல்ல

நூலக அனுமதி

மைய அலுவலகத்திலுள்ள நூலக வேலை நேரம் காலை 9.45 மணியிலிருந்து மாலை 5.45 மணி முடிய. பொதுவாக ரிசர்வ் வங்கிப்பணியாளர்களுக்கு மட்டுமென்றாலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களுக்கு அனுமதி உண்டு.

ரிசர்வ் வங்கியிலிருந்து தகவல் பெறுதல்

இந்திய ரிசர்வ் வங்கி தனது தகவல் தொடர்புக் கொள்கையை ஏற்படுத்தி அமல் செய்து வருகிறது. இதன் கீழ் இந்தியப்பொருளாதாரம், வங்கியியல், நிதியியல் பற்றிய பல புள்ளி விபரங்களை வெளியிடுகிறது. தினம், வாரம், மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என்று கால அளவில் பல புள்ளி விபரங்கள், அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இவைகளுடன், எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம், “அறிதலும் அறிக்கை வழங்கலும்“ (Studies and reports) வெளியிடப் படுகிறது. வங்கியியல், நிதியியல், அந்நியச்செலாவணி பற்றிய தனது அறிவுரைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரகடனப்படுத்தியுள்ளது. பத்திரிகை வெளியீடுகள் மூலமாகத் தகவல்களை மக்களுக்கும் அளிக்கிறது.

வழக்கமாக வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள், அறிக்கைகள் www.rbi.org.in என்ற வங்கியிண் இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது

ஆண்டு வெளியீடுகள்

ஆண்டறிக்கைகள்

ஆகஸ்ட் இறுதியில் வருடாவருடம் வெளியிடப்படும் ஆண்டறிக்கை மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாட்டின் பொருளாதாரம், ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, அதன் நிதிநிலை அறிக்கை பற்றிய விபரங்கள் அதன் மைய இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு அளிக்கப்படுகிறது. இந்தியப்பொருளாதாரத்தைப் பற்றிய கணக்கீட்டையும், எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியது.

ஆகஸ்டில் வெளியிடப்படும் இந்த அறிக்கை சட்டரீதியானது, ரிசர்வ் வங்கியின் நிதியாண்டான (ஜூலை – ஜுன்) ஆண்டுக்குரியது.

இந்திய வங்கியியல் நடைமுறையும் வளர்ச்சியும்

இதுவும் சட்டரீதியான வெளியீடு. ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. முந்தைய ஆண்டில் நிதித்துறைக் கொள்கைகளின் மறுஆய்வுச் செயல்பாடுகளையும் இவ்வறிக்கை பறைசாற்றுகிறது. ஏப்ரல் முதல் மார்ச் முடிய உள்ள ஆண்டிற்கான அறிக்கை நவம்பர் / டிசம்பரில் வெளியிடப்படுகிறது.

பணநாணய நிதி அறிக்கை

மைய வங்கியின் பணியாளர்களால் வெளியிடப்படும் ஆண்டறிக்கை இது. 1998-99 தொடங்கி ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்டு, அது சம்பந்தமான அனைத்துப் பொருளாதார விஷயங்களையும் பற்றி விரிவான மதிப்பீடு இருக்கும். எக்கொள்கை பற்றி அறிக்கையில் முக்கியத்துவம் கொள்ளப்பட்டிருக்கிறதோ, அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்குச் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சவால்கள் என்று பல்வேறு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும். இது டிசம்பரில் வெளியிடப்படுவதால், இடைக்காலப் பொருளாதார ஆய்வினை மேற்கொள்ளவும் வசதியாக இருக்கின்றது.

இந்தியப்பொருளாதார புள்ளி விபரப்புத்தகம்

இந்தியப்பொருளாதாரம் பற்றிய அனைத்து புள்ளி விபரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள உதவும் வகையில் இவ்வெளியீடு அமைகிறது. ஆண்டு, காலாண்டு, மாத, இருவார, தின கால அளவில் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளிவிபரக் கொள்கலனாக இது விளங்குகிறது. தேசிய வருமானம், உற்பத்தி, பணம், வங்கியியல், நிதிச்சந்தை, பொதுநிதி, பன்னாட்டு வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி நிலுவை சம்பந்தமான புள்ளி விபரங்களைப் புத்தகமாகவும், கணிணித்தட்டாகவும் தருகிறது.

இந்தியப் பொருளாதாரத்திற்கான புள்ளிவிபர அடிப்படை

இந்தியப்பொருளாதாரம் பற்றிய புள்ளி விபரங்களின் அடிப்படையாக, கொள்கலனாக ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் வெளியிடுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இத்தளத்தை அணுகவும் தேவைப்படும் விபரங்களை எடுத்துக்கொள்ளவும் உதவுகிறது.

மாநில நிதிகள்

மாநில அரசுகளின் நிதி மதிப்பீடுகளை அவைகளின் நிதிநிலை அறிக்கை மூலம் ஆராய்ந்து ஒருங்கிணைந்த ஆய்வினை அளிக்கிறது. மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளை அளிக்க இது உதவுகிறது.

இந்திய வங்கிகள் சம்பந்தமான புள்ளிவிபரப் பட்டியல்கள்

இது வணிக வங்கிகளைப்பற்றிய புள்ளி விபரங்கள் அடங்கிய ஆண்டு வெளியீடு. ஒவ்வொரு வங்கி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் செயல்பாடு பற்றிய விபரங்கள் அடங்கும். வங்கிக்குழு வாரியாகவும், மாநில வாரியாகவும் இந்த விபரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அடிப்படைப் புள்ளிவிபர அறிக்கைகள்

இதுவும் ஒரு ஆண்டு வெளியீடு. பட்டியலிடப்பட்ட வங்கி வாரியாக, அலுவலகங்கள், அலுவலர்கள, வைப்புகள், கடன்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்படுகின்றன. வட்டார, மாநில, மாவட்ட ரீதியாக புள்ளி விபரங்கள் அளிக்கப்படுகினறன.

காலாண்டு வெளியீடுகள்

மொத்தப் பொருளாதார பண நிகழ்வுகள்

 ஆளுநர் அளிக்கும் ஆண்டுக்கொள்கை அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்னரும், இடைக்கால / காலாண்டு மறுஆய்வுக்கு ஒரு நாள் முன்னரும் இது வெளியிடப்படுகிறது. தேவையான விபரங்களையும், தொழில் நுட்ப அணுகுமுறைகளையும் எடுத்துரைக்கிறது. 2004 வரை ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுக்கொள்கை அறிவிப்பிற்கு முன்னரும் 2005லிருந்து ஆண்டுக்கொள்கை அறிவிப்பு, இடைக்கால மறு ஆய்வு, காலாண்டு மறு ஆய்வுக்கு முன்னரும் வெளியிடப்படுகிறது.

மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் முடிய உள்ள காலாண்டுகளுக்கு இது வெளியிடப்படுகிறது.

மாதாந்திர வெளியீடு 

ரிசர்வ் வங்கி அறிக்கை

ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்காகச் சேர்க்கப்படும் புள்ளி விபரங்களைத் தொகுத்தாராய்ந்து இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. ஆளுநர், துணை ஆளுநர், நிர்வாக இயக்குநர்களின பேச்சினை / சொற்பொழிவை வெளியிடுகிறது. இதன் மூலம் மையவங்கியின் கொள்கைகளை உணர்ந்து கொள்ளலாம். முக்கியமான பத்திரிக்கை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நிதி வங்கி பற்றிய கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆண்டுக் கொள்கை அறிவிப்பு, இந்திய வங்கிகளின் நடைமுறை வளர்ச்சி இவைபற்றி சிறப்புக் கட்டுரைகள் அவ்வப்போது பிரசுரமாகின்றன.

பணகடன் தகவல்கள் மறுஆய்வு

நான்குபக்க மாத வெளியீடு வங்கிகளுக்கு பெரிதும் உதவும். மையவங்கியின் முக்கியமான சுற்றறிக்கைகளை பிரசுரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் வெளியிடப்படுகிறது.

வாரவெளியீடு

புள்ளி விபர துணை வெளியீடு

ரிசர்வ் வங்கியின் வாராந்திர நிதி நிலை அறிக்கை இது. நிதி, பொருள், தங்கச்சந்தைகளின் முக்கிய நிகழ்வுகளை வெளியிடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 12 மணிக்கு இது வெளியிடப்படுகிறது.

தினசரி வெளியீடு

பத்திரிகை வெளியீடு

பணச்சந்தை நிலவரங்கள் பற்றியும், நான்கு பெரிய குறிக்கப்பட்ட அந்நிய நாணயங்களுக்கான வீதங்கள் பற்றியும் (டாலர், யூரோ, பவுன்ட், ஸ்டர்லிங், யென்), முக்கிய வங்கியியல் ஒழுங்கு முறைகள் பற்றியும், நகரக் கூட்டுறவு வங்கிகள் பற்றியும் தினமும் பத்திரிகைச்செய்தி வெளியிடுகிறது.

அவ்வப்போது வெளியீடு

நான்கு மாதத்துக்கு ஒரு முறை இது வெளியிடப்படுகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய வெளியீடு. கட்டுரை ஆசிரியர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளே ஆகும். 1999லிருந்து ஆண்டுக்கு மூன்று முறை வெளியிடப்படுகிறது.

வளர்ச்சி ஆராய்ச்சி குழுமக்கல்வி

ரிசர்வ் வங்கிப் பணியாளர்களுடன் கலந்து வெளி வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சிகள் வெளியிடப்படுகின்றன. உன்னத ஆராய்ச்சிகளில் வெளி வல்லுநர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அமைப்பாக இக்குழுமம் உதவுகிறது.

அறிக்கை

ரிசர்வ் வங்கி தான் நியமித்த குழுக்களின் அறிக்கைகள், கருத்துக்கேட்பு இவைகளை வெளியிடுகிறது.

கையேடுகள்

பொதுமக்களுக்குண்டான வசதிகள் (குறிப்பாக அன்னியச் செலாவணி குறித்த) பற்றி அவர்கள் நன்கு அறிந்து பழகிக் கொள்ள வசதியாக சிறுகையேடுகள் பிரசுரித்து அளிக்கிறது.

சொற்பொழிவுகள்

ஆண்டு தோறும் மூன்று சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. இரண்டு முந்தைய இரு ஆளுநர்கள் நினைவாகவும் மற்றது புகழ்மிக்க பணப்பொருளாதார மேதை ஒருவரின் நினைவாகவும் செயலாக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி இணைய தளம்

ரிசர்வ் வங்கியின் செயல் திறன் மிக்க இணைய தளம்rbi.org.inஇல் எல்லா விபரங்களும் உடனுக்குடன் வெளியிடப்படுகிறது. மற்றும் இதில் தினமும் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

முடிவுகள் எடுக்கப்படும் வழிகளில், மிகுந்த தெள்ளத் தெளிவாக பல விபரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது.

மேலே செல்ல

கேட்புக்கு வெளியிடுதல்

ரிசர்வ் வங்கி வெளியிடும் அனைத்துத் தகவல்களையும், 2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் அத்தகவல்கள் பொதுமக்களுக்கு நன்மை அளிக்குமாயின், ரிசர்வ் வங்கி தனது இணைய தளத்தில் பதிக்கிறது.

மேலே செல்ல

உங்கள் கருத்துக்கள்

ஏற்கனவே வெளியிடுவதைக் காட்டிலும் கூடுதலாக தகவல்கள் ஏதேனையும் ரிசர்வ் வங்கி வெளியிடவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் helpprd@rbi.org.in என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யலாம். ஒரு குறிப்பிட்ட தகவல் ஏதேனும் பிரத்யேகமாகத் தேவைப்பட்டால், 2005 தகவல் அறியும் உரிமச் சட்டத்தின் கீழ் விண்ணப்ப்பிக்கலாம். இது புகார் அளிப்பதற்கு அல்ல, தகவல் கேட்டறியத் தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். தனது துறைகள் பற்றியும் மற்ற வங்கிகள் பற்றியும் உள்ள புகார்களுக்கென அவைகளைத்தீர்த்தளிக்க தனி வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

மேலே செல்ல

வங்கிச் சேவைகளின் பேரில் புகார்கள்

 வங்கிகளின் தரமற்ற சேவை பற்றிய குறைகளைப் பதிவு செய்ய தனி வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப் படுத்தி உள்ளது. எந்த ஒரு வங்கி / கிளை அளிக்கும் தரமற்ற சேவைபற்றிய குறை தெரிவிக்க, முதலில் அந்த வங்கியின் குறிப்பிட்ட குறை தீர்ப்பு அலுவலரை அணுகவும். அவரின் தீர்வு உங்களுக்கு திருப்தி அளிக்காவிடில் அந்த மாநிலத்தில் உள்ள வங்கிக் குறை தீர்பாணையத்தை அணுகலாம். வங்கிக்குறை தீர்ப்பாணையம், ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய ஓர் அமைப்பு. வங்கிச் சேவைகள் மீது மக்களின் குறைகளைத் துரிதமாகவும் குறைந்த செலவிலும் தீர்த்து வைப்பதே இந்த தீர்ப்பாளரின் வேலையாகும். மேலும் விபரங்களுக்கு வங்கிகள் மீது புகார் என்ற இணைய தளத்திற்கும் செல்லலாம்.

சேவைகளின் பேரில் புகார்கள்

ரிசர்வ் வங்கியின் ஏதாவது துறையினால் அளிக்கப்பட்ட தரமற்ற சேவையின் பேரில் உங்களுக்குப் புகார் இருக்குமானால் உங்கள் புகார்களை மண்டல அலுவலகத்தின் குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு இந்த இணைய தளத்தை அணுகவும்.(மண்டல அலுவலகங்கள்)

மேலே செல்ல

 2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் செய்ய

 இச்சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் எழுத்து மூலமாக எத்தகவல்கள் அவர்களுக்குத் தேவையோ அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்களாம். விண்ணப்பங்களில் தொடர்பு கொள்ள ஏதுவான தகவல்கள் (அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், விபரங்கள் தேவைப்பட்டால் அவர்களைத்தொடர்பு கொள்ள வசதியாக இது இருக்கும். இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே தகவல்கள் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படுமாதலால், குடியுரிமைச் சான்றையும் விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும்.

மனுவை அனுப்புதல்

 இச்சட்டத்தின் கீழ் ஒழுங்கு முறைக்கட்டணம் விதி 2005 மத்திய அரசால் கொண்டுவரப் பட்டுள்ளது.சட்டப்பிரிவு 6(i)ன்கீழ் விண்ணப்பங்களுடன் ரூ.10/- ரொக்கம் செலுத்தியதற்கான ரசீது, கேட்புவரைவோலை, வங்கிகாசோலை (சம்பந்தப்பட்ட கணக்கு அலுவலர் பெயரில்) இணைக்கப்பட வேண்டும்.

உங்கள் மனுவுடன் மனுக்கட்டணம் ரூ 10/- க்கான கேட்பு வரைவோலையாகவோ அல்லது வங்கிக்காசோலையாகவோ ரிசர்வ் வங்கியின் பெயருக்கு அனுப்பவும். கட்டணம் பணமாகவும் மனுவுடன் செலுத்தப்படலாம். மனுக்களை நகலிறக்கி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். மனுவைப்பெற்றதும், பெற்றதற்கான ஒப்புதலும், வரிசை எண்ணும் மனுதாரர் செலுத்தவேண்டிய கட்டணமும் தெரிவிக்கப்படும். மனுதாரர் கட்டணம் செலுத்தும்போது வரிசை எண்ணைக் குறிப்பிட வேண்டும். மனுக்கட்டணம் பெறப்பட்ட பின்பே, ரிசர்வ் வங்கி இந்த சட்டத்தின் கீழ் மனுவை பரிசீலனைக்கு ஏற்கும்.

எங்கு அனுப்பவேண்டும் ?

கீழ்க்கண்ட முகவரிகளில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பலாம்

மேல் முறையீடு அதிகாரி, தலைமைப்பொதுத் தகவல் அதிகாரி, மாற்று தலைமைப்பொதுத் தகவல் அதிகாரி.

வரிசை எண்

பதவி

பெயர் & முகவரி

தொலை பேசி எண்

நகலனுப்பு எண்

1

தலைமைப்பொதுத் தகவல் அதிகாரி(CPIO)

திரு V.S.தாஸ்
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
மும்பை -400 001

022-22621382

022 - 2267 9095

2

மாற்றுத்தலைமைப் பொதுத் தகவல் அதிகாரி

திரு.H.N. பிரசாத்
முதன்மைத் தலைமைப் பொது மேலாளர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகம்
மும்பை -400 001

022-22660854

022-2265 8934

 

 

3

சென்னை

திரு R.K. சாரி
பொது மேலாளர்
இந்திய ரிசர்வ் வங்கி
சென்னை-600001

044-25363445

044-25399203

044-23565220

 

 

மேலே செல்ல

தகவல் அளிக்க ஆகும் காலம்

 உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.

மேலே செல்ல

 தகவல் கிடைக்கப் பணம் தரவேண்டுமா ?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஒழுங்கு முறைக்கட்டணம் செலவு) விதிகள் 2005 இன் கீழ் பொது அதிகாரி.

     

  • ஒருபக்கத்துக்கு (A3 or A4) (அச்சு அல்லது நகல்) ரூ.2/-.

  • பெரிய அளவு காகிதமெனில் அதற்குள்ள விலை

  • மாதிரிகள் ஏதேனும் அனுப்பினால் அவைகளுக்குரிய விலை

  • ஆவணங்களை ஆய்வு செய்ய : முதல் ஒரு மணி நேரத்திற் குக்கட்டணம் ஏதுமில்லை, அதற்குக்குறைந்த அளவு, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ.5/- கட்டணம் விதிக்க வேண்டும்

சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க வேண்டியிருந்தால் -

     

  • ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-
  • அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-

எப்பொழுது செலுத்தவேண்டும்?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.

தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் கிடைத்தவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

மேலே செல்ல

கேட்ட தகவலை ரிசர்வ் வங்கி தர மறுக்கலாமா ?

சட்டப்பிரிவு 8, 9 இன் கீழ், சில தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

     

  • இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் தகவல்கள்; பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த, பொருளாதார, அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்டின் தகவல்கள்; அன்னிய நாடுகளுடனான உறவு; குற்றமாகக் கருதப்படுவதற்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
  • நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள் போன்றவைகள் தடைசெய்த தகவல்கள்; நீதிமன்ற அவதூறுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள் 
  • பாராளுமன்ற, சட்டமன்ற தனி உரிமைகளை மீறும் செயலுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்
  • வணிக நம்பிக்கை, வியாபார ரகசியங்கள், அறிவுச்சொத்துகள் சம்பந்தப்பட்ட தகவல்கள்; முன்றாவது நபரின் போட்டியிடும் தன்மையைப்பாதிக்கும் தகவல்கள்; பொதுவான மக்கள் நம்பிக்கைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள் 
  • அந்நிய அரசுகளிடமிருந்து வரும் ரகசியத்தகவல்கள், பிறரது உயிரையையும், உடமையையும் பாதிக்கும் தகவல்கள்; தகவல் தரும் நிறுவனங்களைப் பாதிக்கும் தகவல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அல்லது சட்டத்தை அமல் படுத்துபவர்களை பாதிக்கும் தகவல்கள்
  • ஏற்கனவே விசாரணை, ஆய்விலிருக்கும் விபரங்களைப் பற்றிய தகவல்கள், அமலில் உள்ள விசாரணை, ஆய்வைப் பாதிக்கும் தகவல்கள்
  • அமைச்சர் குழுக்காகிதங்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தகவல்கள்
  • தனி நபர் பற்றிய தகவல்கள் பொது நன்மை அல்லது பொதுக் காரியத்திற்கு அல்லது பொது நன்மைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள்
  • ஒட்டுமொத்தமான பொதுநலன் கருதி தகவல்களை வெளியிடுதல் தேவை என்று தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரி திருப்திபட்டாலன்றி, பொருப்பாண்மையிலிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் தகவல்கள்

மேலே செல்ல

 மேல் முறையீடு செய்ய உரிமை உண்டா ?

ரிசர்வ் வங்கி அளித்த தகவல் மீது உங்களுக்கு திருப்தி இல்லையெனில் அல்லது ரிசர்வ் வங்கி தகவல் தர மறுத்த முடிவின் மேலோ மேல் முறையீடு செய்ய தகவல் அறியும் உரிமைச்சட்டம் வழி வகுக்கிறது.

யாருக்கு மேல்முறையீடு செய்யவேண்டும் ?

மேல்முறையீடு அனுப்ப வேண்டிய அதிகாரியும் முகவரியும் :-

Dr. ராக்கேஷ் மோகன்
(மேல் முறையீடு அதிகாரி)
துணை ஆளுநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாஹித் பகத் சிங் மார்க்
மும்மை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
Tel : 022 - 22610990
Fax : 022 - 2267 5831

அல்லது

திரு வி.லீலாதர்
(மாற்று மேல் முறையீடு அதிகாரி)
துணை ஆளுநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாகித் பகத் சிங் மார்க்
மும்மை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
தொலைபேசி : 022 - 22611097
நகலனுப்பி 022 - 22675277

மேல் முறையீட்டிலும் திருப்தி இல்லையெனில் :

ரிசர்வ் வங்கிக்குள்ளேயே மேல் முறையீட்டிலும் திருப்தி இல்லையெனில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் அதிகாரம் 3 இன் கீழ் மத்திய தகவல் ஆணையாளரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்